சூடானில் இருந்து வருபவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லாதவர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்தியாவிற்கு வரும் பயணிகள் கட்டாயம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆபரேஷன் காவேரி மூலம் சுடானில் இருந்து வரும் இந்தியர்கள் அனைவரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பில்,
”ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) நோய்த்தாக்கம் காணப்படுகிறது. எனவே, மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) நோய் பரவலை தடுக்க இந்தியாவிலிருந்து அந்நாடுகளுக்கு செல்வோர் மற்றும் அந்நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி (Yellow Fever Vaccine) செலுத்திக் கொண்ட பத்து நாட்களுக்கு பிறகே மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அல்லது மேற்கண்ட நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வர அனுமதிக்கப்படுவர். இது விமான நிலையங்களில் சான்றிதழ் (Yellow Fever Vaccination Certificate) மூலம் கண்காணிக்கப்படுகிறது. மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி (Yellow Fever Vaccine) இந்தியாவில் மொத்தம் 50 இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பின்வரும் மூன்று இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது.
பன்னாட்டு தடுப்பூசி மையம் மற்றும் கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலையம் – கிண்டி, துறைமுக சுகாதார நிறுவனம் - இராஜாஜி சாலை, உலக வர்த்தக அவென்யூ - புதிய துறைமுகம், தூத்துக்குடி - 628 004.
தமிழ்நாட்டில் குடியுரிமை பெற்ற ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புவோர் மேற்கண்ட இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களை அணுகி, தடுப்பூசி செலுத்திக் கொண்டு சான்றிதழ் பெற்று பயணம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேற்கண்ட மூன்று இடங்களைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு எந்த இடத்திலும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூடானில் கலவரம் காரணமாக ஆபரேஷன் காவேரி மூலம் இந்தியர்கள், இந்தியாவிற்கு வழைத்து வரப்படுகின்றனர். அப்படி தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் கட்டாயம் தடுப்பு செலுத்திய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அப்படி மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 6 நாட்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் இருக்கும் படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.