ஐபிஎல் 2023 தொடரின் 54வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்து மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் தந்தார்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்த வந்த மும்பை பேட்ஸ்மேன்கள் 17வது ஓவரில் இந்த இலக்கத்தை எட்டினர். இந்தப் போட்டியில் சூர்யாவைத் தவிர நேஹால் வதேரா 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இது தவிர, இஷான் கிஷான் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 8 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்மூலம், மோசமான சாதனை ஒன்றையும் தனது பெயரில் ரோகித் சர்மா பதிவு செய்துள்ளார்.
மீண்டும் சொதப்பிய ரோகித் சர்மா:
ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தொடர்ந்து 5 போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 4 முறை ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகியுள்ளார். ஹிட்மேன் என்று அழைக்கப்படும் என்று ரோகித் சர்மா, கடந்த இரண்டு இன்னிங்ஸ்களில் டக் அவுட்டான நிலையில், நேற்றைய போட்டியில் 7 ரன்களில் வெளியேறினார்.
ஐபிஎல் தொடரில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை துரத்தும்போது அதிக முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த மூன்றாவது வீரர் என்ற மோசமான சாதனை இவர் வசமானது.
ரோகித் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் இதுவரை 7 முறை இதுமாதிரியான நேரத்தில் அவுட்டாகியுள்ளனர். இந்த பட்டியலிலில் தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் சுனில் நரைன் 9 முறை அவுட்டாகி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக் 8 முறை அவுட்டாகி இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
மும்பை அணி விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
பெங்களூரு அணி விவரம்:
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்