உடல் சோர்வாக இருந்தால் மருத்துவர்கள் உடனே பரிசோதிப்பது வைட்டமின் குறைபாடு இருக்கிறதா என்பதைத்தான். வைட்டமின் குறைபாடுகள் பெரும்பாலும் தோல், நகம் என வெளித்தோற்றத்திலேயே பிரதிபலித்துவிடும். சில கூடுதல் பாதிப்புகளைத்தான் மருத்துவர்கள் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்துகின்றனர்.
நம் உடலுக்கு வைட்டமின் சத்துக்களே ஆற்றலை வழங்குகிறது. ஒவ்வொரு வகையான வைட்டமின்களும் தனி தனி உறுப்புகளுக்கு பயனளிப்பதாய் இருப்பதால் தினசரி உணவில் அனைத்து வைட்டமின்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. வைட்டமின் பி 12 என்பது நீரில் கரையக்கூடிய தன்மை கொண்டது. இது நம் உடலின் அன்றாட செயல்பாட்டிற்கு அத்தியாவசிய வைட்டமினாக உள்ளது.
ரத்த சிவப்பணுக்களை உருவாக்குவது, நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் கவனிப்பது போன்ற பல்வேறு பணிகளுக்கு வைட்டமின் பி12 இன்றியமையாதது. வைட்டமின் பி 12 குறைபாடு என்பது 60 வயதுக்கு உள்பட்ட ஆறு சதவீத மக்களை பாதிக்கிறது. மேலும் இதன் எண்ணிக்கை வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. இதனை அஜாக்கிரதையாக விட்டுவிட்டால் நரம்பு மண்டலத்தையே இது பாதிக்கக்கூடும்.
வைட்டமின் பி12 இன் அளவு உங்கள் பாலினம் மற்றும் வயது போன்ற காரணிகளைப் பொறுத்து அமைகிறது. 19 முதல் 64 வயதுடைய பெரியவர்களுக்கு தினமும் 1.5 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. 50 வயது முதல் 100 வயது வரை உள்ள நபர்களிடம் நடத்தப்பட்ட எட்டு வார ஆய்வில், 500 mcg வைட்டமின் B12 கூடுதலாக உட்கொள்வது அவர்களின் உடல்நிலையை இயல்பாக்கியது தெரிய வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வைட்டமின் பி 12 குறைபாடு உள்ள நபருக்கு இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும். இதனால் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதுடன் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உருவாகலாம். இதன் காரணமாக அதை ஈடுசெய்ய இரத்தத்தை அதிகமாக பம்ப் செய்ய ஆரமிக்கிறது இதயம். இதனால்தான் இதயம் வேகமாகத் துடிக்கிறது.
வைட்டமின் பி 12 குறைபாடு ரத்த சோகைக்கும் வழிவகுக்கும். இதயம் மற்றும் நுரையீரல் சிக்கல்களை ஏற்படுத்தும். கடுமையான ரத்த சோகையானது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
இதயத் துடிப்பைத் தவிர இந்த வைட்டமின் குறைபாடு உங்கள் தோலில் வெளிர் மஞ்சள் நிறத்தை உருவாக்கலாம். நாக்கில் புண் அல்லது சிகப்பு நிறமாகத் தோன்றுதல், வாய் புண்கள், எரிச்சல், மனச்சோர்வு போன்ற உளவியல் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படலாம்.
வைட்டமின் பி12 குறைபாடு அறிகுறிகள் என்னென்ன?
மனநிலையில் மாற்றம்: வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் அடிக்கடி மூட் ஸ்விங்க்ஸ் எனப்படும் மனநிலையில் மாற்றம் ஏற்படும்.
சமநிலைப் பிரச்சனை: வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும்போது உடல் சமநிலைப் பிரச்சனைகள் உருவாகும். இதனால் அடிக்கடி கீழே விழுதல் ஏற்படும்.
நினைவாற்றல் குறைபாடு: வைட்டமின் பி12 பிரச்சனையால் நினைவாற்றல் குறைபாடு ஏற்படும். பர்ஸ், போன், சாவி என சிறுசிறு பொருளை வைத்த இடம் தெரியாமல் அலைந்தால் பி12 குறைபாடும் காரணமாக இருக்கலாம்.
தசைகள் சோர்வு: வைட்டமின் பி12 குறைபாட்டால் தசைகள் வலுவிழந்துபோகலாம்.
மன அழுத்தம்: வைட்டமின் பி12 குறைபாட்டால் மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்படலாம்.
சோர்வு மற்றும் இரவு நேர வியர்வை பிரச்சனையும் கூட பி12 குறைபாட்டால் ஏற்படலாம்.
வைட்டமின் பி12 உணவுப்பொருட்கள்:
வைட்டமின் பி 12 பெரும்பாலும் இறைச்சி மற்றும் பால் பொருள்களில் காணப்படுகிறது. மேலும், விலங்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் கிடைக்கிறது. மத்தி மற்றும் சால்மன் போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி12 அதிகம் கிடைக்கிறது. முட்டை, பால் மற்றும் சீஸ் ஆகியவற்றில்
வைட்டமின் பி12 அதிகமாக இருக்கிறது.