ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி மொத்த வியாரிகள் விற்பனைக்காக காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் இருந்து பல ரக காய்கறிகள் வரும். கோயம்பேடு சந்தையிலிருந்து சிறு மொத்த வியாபாரிகள் தேவையாக காய்கறிகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் சில்லறை வியாபாரத்தில் காய்கறிகளின் விலை 20 முதல் 30 ரூபாய் வரை அதிகமாக தான் விற்பனை செய்யப்படும்.
ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. தென் மேற்கு பருவ மழை கேரளாவில் மட்டுமல்லாமல் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை தரும். பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் அனேக மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை தக்காளியின் விலை 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை விழி பிதுங்கும் அளவு எக்குதப்பா உயர்ந்துள்ளது. ஜூன் 27 ஆம் தேதி தக்காளி ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 75 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று மீண்டும் உயர்ந்து ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் என்ன சமைப்பது என தெரியாமல் திக்கு முக்காடியுள்ளனர்.
மொத்த வியாபார கடைகளில் ரூயாய் 90 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 120 முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தக்காளி இல்லாமல் என்ன சமைப்பது என பட்டியல் போட்டு சமைத்து வருகின்றனர். இன்னும் சில தினங்களுக்கு தக்காளியின் விலை இப்ப்டி தான் இருக்கும் எனவும், அதன் காய்கறி வரத்தை பொறுத்து விலை படிப்படியாக குறையும் என்னவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.