குரூப் - 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 10,292-ஆக அதிகரித்து புதிய பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதன்படி 5,321 இளநிலை உதவியாளர், 3,337 தட்டச்சர், 1,079 சுருக்கெழுத்தர், 425 விஏஓ உள்பட 10, 292 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கபப்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்புவதற்காக ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக நடத்தப்படும் தேர்வுகளின் அட்டவணை, தேர்வு முடிவுகள், அறிவிப்புகள் என டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. 


குரூப்-4:


 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், விஏஓ உள்பட குரூப் -4 பதவிகளின் கீழ் வரும் காலிபணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2022 ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த பதவிகளுக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் சுபார் 20 லட்சத்திற்கு மேலானோர் விண்ணப்பித்து அதில், 18,36,535 பேர் கடந்த ஆண்டு. ஜூலை மாதம் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவு கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியானது. 


இந்த சூழலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக குரூப் 4 தேர்வுகள் நடைபெறாமல் இருந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, காலிபணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 


அதன் தொடர்ச்சியாக 7,301 என்ற அளவில் இருந்த காலி பணியிடங்களை சிறிது சிறிதாக அதிகரித்து, 10,178 ஆக உயர்த்தியது. இந்த நிலையில், மீண்டும் குரூப்-4 பதவிகளில் காலியிடங்களை அதிகரித்து புதிய பட்டியலை நேற்று டிஎன்பிஎஸ்சி. வெளியிட்டுள்ளது. அதன்படி, 


இளநிலை உதவியாளர் - 5,321
தட்டச்சர் - 3,377
சுருக்கெழுத்தர்- 1,079
விஏஓ- 425
பில் கலெக்டர்- 69
கள உதவியாளர் - 20 
இருப்பு காப்பாளர் - 1


என மொத்தம் 10,292 காலி பணியிடங்கள் குரூப்-4 பதவிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.