அண்மையில் நடிகர் சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆண்களைப் போல அல்லாமல் தனித்த அறிகுறிகள் தென்படுகின்றன.பொதுவாகப் பெண்களில் இதய நோய்களுக்கன அறிகுறி வேறாக வெளிப்படுகிறது. இதய நோய்க்கான அறிகுறிகள் குழந்தைப் பருவத்தில் தோன்றி, காலப்போக்கில் அது பெரிதாகும்போது திடீரென்று ஆபத்தில் முடியலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வயதினருக்கும் தனித்தனியே இதற்கான பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.


20-40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு:


1. எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈசிஜி) - இதயத்தின் மின் சமிக்ஞைகளைப் பதிவு செய்வதன் மூலம் இதயப் பிரச்சனைகளை விரைவாகக் கண்டறிந்து இதயத்தின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க உதவுகிறது, அதாவது அரித்மியாஸ் (இதயம் மிக மெதுவாக, மிக விரைவாக அல்லது ஒழுங்கற்ற முறையில் துடிப்பது), தமனிகளில் ஓட்டம் தடைபட்டு அல்லது குறுகலாக இருப்பது, , கார்டியோமயோபதி (இதயச் சுவர்கள் தடிமனாகவோ அல்லது பெரிதாகவோ இருப்பது) அல்லது முந்தைய மாரடைப்பு ஆகியவற்றை இதன் மூலம் அறியலாம்.


2. லிப்பிட் ப்ரொஃபைல் - இது  கொலஸ்ட்ரால் சோதனை அல்லது லிப்பிட் பேனல் என்றும் அழைக்கப்படுகிறது. லிப்பிட் ப்ரொஃபைல் சோதனை என்பது உங்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை கணக்கிட உதவும் இரத்த பரிசோதனை ஆகும். உங்கள் தமனிகளில் கொழுப்பு படிவுகள் உருவாகும் அபாயத்தை இது அனுமானிக்கிறது, உங்கள் உடலில் முழுவதும் குறுகலான அல்லது அடைபட்ட தமனிகளைக் கண்டறிய இது உதவுகிறது.


3. ஃபாஸ்டிங் இரத்த சர்க்கரை - இந்த சோதனை சாப்பிடாமல் இருந்ததற்குப் பிறகான இரத்த சர்க்கரையை அளவிட உதவுகிறது. 100 mg/dL க்கும் குறைவான இந்த இரத்த சர்க்கரை அளவு சாதாரணமான அளவாகும், 100 முதல் 125 mg/dL வரை ப்ரீடயாபட்டீஸ் என்று கருதப்படுகிறது மற்றும் 126 mg/dL அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதை உறுதி செய்கிறது.


40-60 வயதிற்குட்பட்டவர்களுக்கு...


1. டிரெட்மில் பயிற்சி சோதனை - இது மார்பு வலி அல்லது மூச்சுத் திணறலுக்கான காரணத்தை மதிப்பிடுவதற்கு, உடற்பயிற்சி செய்வதில் உங்கள் இதயத்தின் சகிப்புத்தன்மையைக் கண்டறியவும் மற்றும் இதயத்தில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதைப் பார்க்கவும் செய்யப்படுகிறது.


2. இமேஜிங் சோதனை - இது ஸ்ட்ரெஸ் எக்கோ கார்டியோகிராபி என்றும் அழைக்கப்படுகிறது, இது மார்பு வலிக்கான காரணத்தை மதிப்பிட உதவுகிறது, ஏனெனில் இந்த சோதனை வழக்கமான பிற சோதனைகளை விட மிகவும் துல்லியமானது.


3. கரோனரி ஆர்டரி கால்சியம் (சிஏசி) ஸ்கோரிங்கிற்கான ஹார்ட் சிடி ஸ்கேன் - கரோனரி ஆர்டரி கால்சியம் (சிஏசி) ஸ்கோர் இதய தமனிகளில் உள்ள கால்சிஃபைட் பிளேக்களின் அளவை கண்டறிகிறது, இந்த கரோனரி பிளேக் என்பது பெருந்தமனி நோய்க்கு முக்கிய அடிப்படைக் காரணமாகும். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய், இதய நோய் குடும்பத்தில் பிறருக்கு இருந்தால்,  அவர்களுக்கு இந்த சோதனை பரிந்துரைக்கப்படலாம். மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் கண்டறியவும், ஸ்டேடின் (கொழுப்பைக் குறைக்கும் மருந்து) மற்றும் ஆஸ்பிரின் ஆகியவற்றைத் தொடங்கலாமா என்பதைத் தீர்மானிக்கவும் இந்தச் சோதனையானது பயனுள்ளதாக இருக்கும்.