கொரோனாவின் மூன்றாவது அலை நிச்சயம் நிகழுமா??? 


இதுவரை இந்த பெருந்தொற்றின் போக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க கண்ட நாடுகளில் நடந்து கொண்ட விதம் பெருநகரங்களில் நடந்து கொண்டுள்ள விதம் போன்றவற்றை கூர்ந்து நோக்கும் போது மூன்றாம் அலை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றே தெரிகிறது. 


கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்களா?


இதுவும் அனுபவத்தின் வழி செய்யும் யூகம் தான். முதல் அலையில் 60+ வயதினரில் மிக அதிக மரணங்கள் 45+ வயதினரில் அதிக மரணங்கள் நிகழ்ந்தது. இரண்டாவது அலையில் மேற்சொன்ன வயதினருடன் சேர்த்து 30 முதல் 45 வயதினரிடையேவும் 30% அதிக மரணங்கள் நிகழ்ந்தன. எனவே மூன்றாவது அலையில் 10 முதல் 30 வயதுடையோர் அதிகமான பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது என்பது கணிப்பு.  ஆனால் நிச்சயம் இப்படி தான் இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற இயலாது.


India Corona Cases, 16 June: இந்தியாவில் ஒரே நாளில் 67,208 பேர் பாதிப்பு


பிறகு ஏன் தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கு என மூன்றாவது அலை தயாரிப்புகளை முன்னெடுத்து வருகிறது? 


குழந்தைகள் நலம் என்பது தனி ஸ்பெசாலிட்டியாகும். வயது வந்தோருக்கு சிகிச்சை அளிப்பது போல குழந்தைகளுக்கு அனைத்து மருத்துவர்களாலும் எடுத்த எடுப்பில் சிகிச்சை வழங்கி விட முடியாது. இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கே கொரோனா குறித்த சரியான நிலைப்பாட்டை கொண்டு சேர்க்க வேண்டும். வயது வந்தோர்க்கான வார்டுகளில் பணி புரியும் செவிலியர்களால் உடனடியாக குழந்தைகள் வார்டில் பணி புரிய முடியாது. காரணம் குழந்தைகளுக்கு சிரை மூலம் திரவம் செலுத்துவதில் இருந்து அவர்களுக்கு ஏற்ற டோஸ் பார்த்து மருந்து வழங்குவது வரை தனிக்கவனம் மற்றும் சிரத்தை எடுக்க வேண்டும். எனவே குழந்தைகள் வார்டில் பணிபுரியும் குறிப்பாக குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில்  பணிபுரியும் செவிலியர்கள் மிக நுண்ணிய பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் போன்றவர்கள். மேலும் குழந்தைகளுக்கு என பிரத்யேக ஆக்சிஜன் மாஸ்க்குகள், வென்ஃப்லான்கள், ஐசியூ படுக்கைகள், செயற்கை சுவாச சுவாசப் படுக்கைகள் ஏற்படுத்திட வேண்டும். 




மூன்றாவது அலையில் எதிர்பார்த்தபடி குழந்தைகள் பாதிக்கப்படாமல் போனால் அத்தனையும் வேஸ்ட் தானே?


அப்படி இல்லை. எப்போதும் போர் சூழலில் வொர்ஸ்ட் கேஸ் சினாரியோவுக்கு தான் தயாராக வேண்டும். எதிரியை குறைவாக எடை போட்டு நம்மை அதிகமாக எடைபோட்டதால் தோற்ற போர்களே அதிகம். எனவே  மோசமான எதிரியையும் அதை விட பயங்கரமான யுத்தத்தையும் எதிர்பார்த்து தயாராவது தவறாகாது. இரண்டாவது அலை தந்த பாடம் நமக்குப் பெரியது. எனவே இந்த தயாரிப்பு தேவை தான். ஒருவேளை இந்த தயாரிப்பு மூன்றாம் அலையில் தேவையற்றதாகிப்போனாலும் கூட அதிகப்படுத்தப்பட்ட கட்டமைப்புகளால் தமிழ்நாட்டில் பொதுசுகாதாரம் மேம்படும். அதிலும் குழந்தைகள் நலம் குறித்த சிகிச்சை முன்னேறும். பல்லாயிரம்  ஏழைகள் பயன்பெறுவார்கள். 




மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியுமா? 


முடியும் என்றே நம்புகிறேன். மூன்றாவது அலை நம்மை அடையுமுன் 40-50% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியாவது கிடைத்தால் மூன்றாவது அலையில் ஏற்படும் மரணங்கள் கனிசமான அளவு குறையக்கூடும். இன்னும் சொல்லப்போனால் மிகப்பெரும் மூன்றாம் அலை தமிழ்நாட்டில் ஏற்படாமலும் நம்மால் தடுக்க முடியும். வீட்டில் வாழும் 18+ மக்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவதால் அந்த குடும்பத்தைப் பொறுத்தவரை "குடும்ப எதிர்ப்பாற்றல்" உருவாகி விடும். இது அந்த குடும்பத்தில் இருக்கும் <18 குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பை மிகவும் குறைத்து விடும். தினமும் 3.5 லட்சம் தடுப்பூசிகள் பெறும் அளவு "தடுப்பூசி ஆர்வம்" அதிகரித்துள்ளது சிறப்பானது. 


இதே வேகத்தில் நாம் தடுப்பூசி பெற்றால் கூடவே, சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி 
முகக்கவசம் அணிதல், கைகளை முறையாக கழுவுதல் போன்றவற்றையும் கடைபிடிப்போமானால் 
மூன்றாவது அலை தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வேண்டுமானாலும் வெளியே தெரியுமே அன்றி ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனைகளை ஈசல் போல மொய்க்காத கொரோனா மரணங்கள் மிக மிக மட்டுப்பட்டு கிடக்கும் அந்த நாட்களை கனா காண்கிறேன்.


அதிகாலையில் இருந்து தடுப்பூசி பெறக் காத்திருந்து  மூன்றாவது அலையை மட்டுப்படுத்த நம் மக்கள் எடுக்கும் பொறுப்புணர்வை கீழ்காணும் படத்தில் காண்கையில், இறைவன் நாடினால்
நம்மால் அது முடியும் என்றே நம்புகிறேன். 


டாக்டர். ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை


கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!