சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்துள்ள ஜலகண்டாபுரம் சவுரியூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (31), விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (28). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றது. இந்த தம்பதிக்கு 11 வயதில் பெண் குழந்தையும், 7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சங்கீதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக, கடந்த மே மாதம் 28 ஆம் தேதி எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு, வீடு திரும்பிய சங்கீதாவுக்கு 2 வாரங்கள் கழித்து, அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும் அதே மருத்துவமனை சங்கீதாவை சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், வயிற்றில் ரத்தம் கட்டியுள்ள தாகவும், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியதன் பேரில், 2 வது முறையாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.



அதன் பின்னர், வீட்டில் இருந்தபடி மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு வந்த சங்கீதாவுக்கு, கடந்த மே மாதம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை அந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 3வது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த மே 30 ஆம் தேதி காலை உடல்நிலை மோசமான நிலையில் சங்கீதா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் தான், சங்கீதா உயிரிழந்ததாக கூறிய அவரது உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் இருந்த பொருட்களை உடைத்து சூறையாடினர். இதுபற்றி தகவலறிந்த தாசில்தார் லெலின், மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் விசாரணை நடத்தினர். ஆனால், அதனை ஏற்க மறுத்து, சங்கீதாவின் உறவினர்கள் சங்கீதா மறைவிற்கு காரணமான மருத்துவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு பரபரப்பு நிலவி வந்தது.


இதுகுறித்து சங்கீதாவின் உறவினர்கள் கூறுகையில், மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் தான் சங்கீதா இறந்துள்ளார். எனவே, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கைது செய்து, மருத்துவமனைக்கு சீல் வைக்க தாசில்தார் மற்றும் மருத்துவதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனைத் தொடர்ந்து மூன்று முறை அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.



பின்னர், எடப்பாடி அரசு தலைமை மருத்துவர் செந்தில்குமரன் முன்னிலையில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. முன்னதாக, தீவிர சிகிச்சையில் இருந்த மூன்று நோயாளிகள் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கும், சாதாரண சிகிச்சையில் இருந்த சுமார் 20 நோயாளிகளை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து, சங்கீதாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது எடப்பாடியில் உள்ள மருத்துவமனையில் பெண்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்தும், அங்குள்ள ஆவணங்கள் குறித்தும் இந்திய மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண