தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வளி மண்டல் சுழற்சி காரணமாக வரலாறு காணாத அளவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாய் மாறியது. பலரும் தங்களது வீடுகளை இழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் ஒரு சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது. பொது மக்களுக்கு நிவாரணப் பொருடகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் காரணமாக தென் மாவட்டங்கள் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இன்னும் ஒரு சில பகுதிகளில் பாதிப்புகள் முழுமையாக சரி செய்யப்படவில்லை. அதிகப்படியான மழை நீர் தேங்கியிருந்ததால் தொற்று பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்றுகள் பரவ வாய்ப்பு உள்ளதால் அங்கு தமிழ்நாடு அரசு தரப்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளான தென் மாவட்டங்களில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு வரும் 28 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படும் என பொது சுகாதார துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், “ கனமழை எதிரொலியாக தென் மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வரும் 28 ஆம் தேதி 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படும். தென் மாவட்டங்களில் மொத்தம் 8 லட்சம் சிறார்களும், குழந்தைகளும் உள்ளனர். இதில் மழை வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும். மேலும் மத்திய அரசு தரப்பில் 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே போதிய அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது” என தெரிவித்துள்ளனர்.
மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக பேசிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, “40 மணி நேரத்தில் 54 செ.மீ மழை பெய்துள்ளது. 8,500 சதுர கிலோமீட்டரில் (தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட பரப்பளவு) 54 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 150 டி.எம்.சி தண்ணீர் அதாவது மேட்டூர் அணையின் கொள்ளளவில் 50% அதிகமாகும். பாபநாசம் மணிமுத்தாறு அணையில் 10 மடங்கு அதிக தண்ணீர். இந்த தண்ணீர் கடலுக்கு சென்றாக வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீர் வடிகால் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.