இன்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறுகிறது. இந்த கூட்டம் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று இந்த கூட்டம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன் படி, வரும் 26.12.2023 – செவ்வாய் கிழமை காலை 10.35 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் கூட்டத்தின் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது, அப்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்ஸை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்தார். இது பெரும் சர்ச்சையாக கிளம்பியது. பின் இது தொடர்பாக ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். கட்சி யார் கைவசம் வரும் என அரசியல் வட்டாரமே உற்று நோக்கியது. இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. மேலும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கே சாதகமாக அமைந்தது. இப்படி இருக்கும் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன் அதிமுக கட்சி சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தப்படாது என்று ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இன்று நடைபெறும் பொதுக்குழுவில் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மட்டுமே கலந்துக்கொள்கின்றனர். அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைபெற்ற பொதுக்குழு எவ்வளவு எதிர்ப்பார்ப்பை கிளப்பியதோ, அதே அளவு எதிர்ப்பார்ப்பு இன்று நடைபெற்று வரும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவு ஈர்த்துள்ளது.
இந்த கூட்டத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும், பா.ஜ.க.வுடனா கூட்டணி முறிவுக்கு பிறகு பொதுத்தேர்தலை சந்திக்க இருப்பது குறித்தும், உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துதல் குறித்தும், தேர்தல் பரப்புரைகள், தேர்தல் பணிகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களையும் கைப்பற்றுவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மிக்ஜாம் புயலால சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு தமிழ்நாடு அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி நிலைப்பாட்டை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அதிகார வட்டங்கள் தெரிவிக்கின்றன.