வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசியல்வாதிகள் தலையீடு உள்ளதாக கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் தர்ணாவில் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 150க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 5 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செவிலியர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 




அப்போது செவிலியர் சங்க நிர்வாகிகளிடம் கரூர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. அனைத்து சுகாதாரத்துறை செவிலியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், பொது சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து சுகாதார செவிலியர்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியில் போதிய கவனம் செலுத்த இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.




கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க


அந்தந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தும்படி கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இது நடைமுறையில் இல்லாத செயலாகும். இது குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு அரசு உத்தரவும் வெளியிடப்படாத நிலையில் அரசியல்வாதிகள் இவ்வாறு செய்வது முற்றிலும் தவறான செயல். இதை வன்மையாக கண்டிக்கிறோம். கொரோனா தடுப்பூசி பணியில் காலை 7 மணி முதல் மாலை 7 வரை தொடர்ச்சியாக பணி மேற்கொள்வதால் ஊழியர்களை சோர்வடையும் சூழல் உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள ஆணையிட வேண்டும்.




தடுப்பூசி முகாம் பணிக்கு வாகன வசதி ஏற்பாடு செய்து தரவேண்டும். தடுப்பூசி போடும்போது சமூகவிரோதிகள் காழ்ப்புணர்ச்சியுடன் தாக்குதலுக்கு உள்ளாக்குவதை தடுத்திட காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தடுப்பூசி பணியில் அரசியல்வாதிகள் தலையீடு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக நடைபெறும் வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.