Aplastic Anaemia: அப்லாஸ்டிக் அனீமியா பாதிப்பு என்றால் என்ன, அதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பான முழு தகவல்களை இங்கே அறியலாம்.
சௌந்தர்யா அமுதமொழி மறைவு:
தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் சௌந்தர்யா அமுதமொழி. சீரான தமிழ் உச்சரிப்பு, செய்திகளை நேர்த்தியாக கையாளுதல் போன்ற திறன்கள் மூலம், ஊடகத்துறையில் தனக்கான தடம் பதித்து வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்லாஸ்டிக் அனீமியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட அவர், ஊடகத்துறை மற்றும் அரசு என பல்வேறு தரப்பினரின் உதவியுடன் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். விடாமுயற்சியுடன் சௌந்தர்யாவும் அந்த நோயை எதிர்த்து போராடி வந்தார். நிச்சயம் அவர் மீண்டு வந்து ஊடக பயணத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 26ம் தேதி சௌந்தர்யா அமுதமொழியின் உயிர் பிரிந்தது.
அப்லாஸ்டிக் அனீமியா என்றால் என்ன?
சௌந்தர்யாவின் சிகிச்சைக்காக சுமார் 1 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அத்தகையை மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பாதிப்பான அப்லாஸ்டிக் அனீமியா என்றால் என்ன? சிகிச்சை மூலம் அதனை குணப்படுத்த முடியுமா என்பதே பலரது கேள்வியாக உள்ளது. முதலில், அப்லாஸ்டிக் அனீமியா என்பது புற்றுநோய் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், உண்மையில் அது ஒரு புற்றுநோய் அல்ல. இது ஒரு அரிதான ஆனால் உயிருக்கு ஆபத்தான ரத்தக் கோளாறாகும். ஒருவரது எலும்பு மஜ்ஜை தனது உடல் இயல்பாக செயல்பட போதுமான புதிய ரத்த அணுக்களை உருவாக்க முடியாதபோது அப்லாஸ்டிக் அனீமியா ஏற்படும். இது விரைவாகவோ அல்லது படிப்படியாகவோ உருவாகலாம். அப்லாஸ்டிக் அனீமியா லேசானதாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கலாம்.
அப்லாஸ்டிக் அனீமியா எந்த வயதினரை தாக்கும்?
அப்லாஸ்டிக் அனீமியா எந்த வயதினரையும் தாக்கலாம். பொதுவாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரையும், 15 முதல் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களையும் தாக்குகிறது. அடிப்படை ஆய்வக சோதனைகள் ரத்த சோகை, குறைந்த பிளேட்லெட்டுகள் மற்றும் மாறுபட்ட தீவிரத்தன்மை மற்றும் குறைந்த வெள்ளை ரத்த அணுக்கள் ஆகியவற்றைக் காண்பிக்கும். நோயறிதலை உறுதிப்படுத்த பொதுவாக எலும்பு மஜ்ஜை சோதனை தேவைப்படுகிறது.
அப்லாஸ்டிக் அனீமியா எப்படி பரவும்?
அப்லாஸ்டிக் அனீமியா மூதாதையர்கள் மூலமாகவும், போதைப்பொருள் அல்லது நச்சு மருந்துகள் ஆகியவற்றால் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலான நோயாளிகளுக்கு, பாதிப்புக்கான காரணம் புலப்படுவதே இல்லை. எனவே, பாதிப்பிற்கு ரத்த அணுக்களின் நோயெதிர்ப்பு அழிவு காரணமாக பார்க்கப்படுகிறது. இது நோயெதிர்ப்பு / அக்வைர்ட் அப்லாஸ்டிக் அனீமியா என்று அழைக்கப்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
ரத்த சிவப்பணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளின் போதிய உற்பத்தி இல்லாததன் விளைவாக அப்லாஸ்டிக் அனீமியாவின் அறிகுறிகள் ஏற்படுகின்றன. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் நோயாளிகள் அடிக்கடி சோர்வு, பலவீனம் மற்றும் வெளிறிய தன்மையை அனுபவிக்கிறார்கள். இது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் போக்குவரத்தையும் தடுக்கிறது. கூடுதலாக, வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தி குறைவதால் ஏற்படும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு தனிநபர்களை தொற்றுநோய்களுக்கு ஆளாக்குகிறது. பிளேட்லெட்டுகளின் பற்றாக்குறை எளிதில் சிராய்ப்பு, நீடித்த ரத்தப்போக்கு மற்றும் ரத்தக்கசிவு அபாயத்தை அதிகரிக்கும். மற்ற அறிகுறிகளில் விரைவான இதயத் துடிப்பு, மூச்சுத் திணறல் மற்றும் அதிகப்படியான தலைச்சுற்றல் ஆகியவையும் அடங்கும்.
அப்லாஸ்டிக் அனீமியா சிகிச்சை முறைகள்:
நோயாளியின் வயது மற்றும் நோயின் தீவிரத்தைப் பொறுத்து, அப்லாஸ்டிக் அனீமியாவிற்கு பல சிகிச்சை முறைகள் உள்ளன. ஒரு இளம் மற்றும் உடல் தகுதியுள்ள நோயாளிக்கு, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையானது முதல் பரிந்துரையாக கருதப்படுகிறது (சௌந்தர்யாவிற்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது). தகுந்த நன்கொடையாளரைக் கண்டுபிடிப்பது சவாலாக இருக்கும் வயதான நபர்கள் அல்லது இளம் வயது நோயாளிகளுக்கு, தைமோசைட் எதிர்ப்பு குளோபுலின் மற்றும் கால்சினியூரின் இன்ஹிபிட்டர்கள் போன்ற இம்யூனோமோடூலேட்டரி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகு உடல் அதன் சொந்த ரத்த அணுக்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் வரை, ரத்தம் மற்றும் பிளேட்லெட் அமைப்பு உள்ளிட்ட ஆதரவு பராமரிப்பு என்பது முக்கிய அம்சமாகும். குறைந்த வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை காரணமாக, உடல் பல நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறது. அந்த நோய்த்தொற்றுகளுக்கான சிகிச்சையும் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
அப்லாஸ்டிக் அனீமியா என்பது நோயாளிக்கும் ஹீமாட்டாலஜிஸ்ட்டுக்கும் ஒரு சவாலான கோளாறு. அதன் அரிதான மற்றும் சிக்கலான தன்மை காரணமாக, அப்லாஸ்டிக் அனீமியா பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வானது, அதன் ஆரம்பகால நோயறிதல் மற்றும் வெற்றிகரமான சிகிச்சைக்கான மிக முக்கியமான நடவடிக்கையாகும்.
(பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிடப்பட்ட மருத்துவ தகவல்கள் என்பது, பல்வேறு ஊடக அறிக்கைகளில் வெளியான மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளின் தொகுப்பாகும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு சிகிச்சை முறையையும் மேற்கொள்வதற்கு முன்பாக, உரிய மருத்துவரை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்)