உலக தற்கொலை தடுப்பு வாரம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் தேதியை சர்வதேச தற்கொலை தடுப்பு தினமாக உலக சுகாதார நிறுவனம் கடைபிடித்து வருகிறது. தற்கொலை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கும், தற்கொலையைத் தடுக்க உதவுவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் தேசிய தற்கொலை தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. தற்கொலையைத் தடுப்பது, ஒரு உலகளாவிய தேவை என உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O) அறிக்கை குறிப்பிடுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதேபோல இந்த எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் தற்கொலை  செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. 


மனநலம் சார்ந்த நோய்களான மன அழுத்தம் போன்றவை உலகம் முழுக்க தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல அறிவியல் இதழான லான்செட்டின் 2016-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள பத்தில் ஒருவருக்கு மட்டுமே அதற்குரிய மருத்துவ உதவி கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல உலகம் முழுக்க நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மக்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. 40 வயதிற்குட்ட இளைஞர்கள் பலரும் படிப்பு மற்றும் தொழில் சார்ந்த கவலைகள், குடும்ப பிரச்சினைகள், உறவு சார்ந்த சிக்கல்கள், பொருளாதார சிக்கல்கள் ஆகிய காரணங்களுக்காக மனமுடைந்து, நம்பிக்கைகள் இழந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. 


உலகம் முழுக்க ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. ஒவ்வொரு வருடமும் 8 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலையின் காரணமாக உயிரிழக்கிறார்கள். அமெரிக்காவில்  46 லட்சம் பேர், தற்கொலை முயற்சி தோல்வியடைந்து உயிர்பிழைத்ததாக அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் சூசைடாலஜி (AAS) தெரிவிக்கிறது. 


தற்கொலை தடுக்கக்கூடிய ஒன்றுதான். உடல் சார்ந்த பல்வேறு நோய்களைப் போல தற்கொலை எண்ணத்தை மனநோயாக கருதி அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதன் அந்த எண்ணத்தையே முற்றிலுமாக ஒழிக்க முடியும். அதே போல சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தற்கொலை தடுப்பில் முன்னிலை வகிக்கிறது. தற்கொலை எண்ணத்தில் இருக்கும் யாரையாவது தெரியும்பட்சத்தில் திறந்த மனதோடு அவர்களோடு பேசுவதன் மூலமும், அவர்கள் கூறுவதைக் கேட்டு அவர்களுக்குன் ஆதரவு வழங்குவதன் மூலமும் அவர்களை அந்த எண்ணங்களிலிருந்து விடுபட செய்யலாம் என தெரிவிக்கிறது உலக சுகாதார ஆய்வு நிறுவனம்.