டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘துக்ளக் தர்பார்’ (Tughlaq Durbar) . அரசியல் டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்த படம் வருகிற செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு சன் தொலைக்காட்சியிலும் , செப்டம்பர் 11-ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது. துக்ளக் தர்பார் படத்திற்கு '96' புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படம் தவிர்த்து விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபது என இன்னும் மூன்று படங்கள் இந்த மாத வெளியீட்டிற்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில் நமது abp நாடு சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். குறிப்பாக தமிழக சட்டசபையில் நடக்கு கேள்வி பதில் விவாதங்களை தற்போது அதிகமாக பார்க்கிறாராம் விஜய் சேதுபதி. அது பார்ப்பதற்கு ஆரோக்கியமாக  இருக்கிறது. என்னை போலவே மற்றவர்களும் அதை பார்க்க வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்தார். இது போன்ற அரசியலை வெகு நாட்களாக தமிழகம் பார்க்கவில்லை. அம்மா உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட பொழுது எடுத்த நடவடிக்கைகள் தனக்கு  பிடித்திருந்ததாகவும் குறிப்பாக முதல்வரின் மெச்சூரிட்டி தனக்கு பிடித்திருந்தது என தமிழ அரசின் ஆட்சியை புகழ்ந்துள்ளார் விஜய் சேதுபதி.





பேமிலி மேன் சீரிஸில் விஜய் சேதுபதி நடிப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், அது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது போன்ற விமர்சனங்களை கேட்கும் பொழுது “போங்கடா வெண்ணெய்களா” என்றுதான்  தோன்றும் என தனக்குரிய பாணியில் பதிலளித்துள்ளார்.மேலும் தான் தமிழன் இல்லை என பலரும் விமர்சித்த நிலையில் என் சாதியை கூறினாலே நான் தமிழனா இல்லையா என்பது தெரியும். ஆனால் மொழி, மதம், குலதெய்வம் போன்றவற்றை வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. அது எனக்கு தேவையில்லாத ஒன்று. என்றாலும் கூட இதையெல்லாம் உண்மை நம்புவர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக உள்ளது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


ஓடிடி வளர்ச்சி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,தொழில்நுட்ப வளர்ச்சி எப்போதுமே வரவேற்கத்தக்கது. ஆனால் தியேட்டரில் படம் பார்க்கும் எனர்ஜி என்பது வேறு என பதிலளித்தார். இது தவிர தனது அரசியல் ஆர்வம், கடந்த கால வாழ்க்கை, திருக்குறள் ஆர்வம், வாழ்க்கை கற்று தந்த பாடம் உள்ளிட்ட பல சுவாரஸ்யங்களை ஏபிபி நாடுடன் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி, முழுமையான பேட்டியை கீழ்கண்ட யூ டியூப் பக்கத்தில் காணலாம்.