இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானது.ரவி சாஸ்திரிக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபி நிபுணர் நிதின் படேல் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் அருண் ஆகியோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.






சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இங்கிலாந்தில் விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் நெகடிவ் என வந்ததை அடுத்து அவர்கள் இன்று ஓவல் மைதானத்தில் நடக்கும் 4ம் நாள் ஆட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.


முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக நகர்ந்தது. இந்த போட்டியில், ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா சதம் கடந்து அசத்தியுள்ளார். இதன் மூலம், ஓவர்சீஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். 1 சிக்சர், 12 பவுண்டரிகள் என 205 பந்துகளில் சதம் கடந்து அசத்தியுள்ளார் ஹிட்-மேன் ரோஹித். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஸ்கோர்: 270/3






இதுவரை, டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ளூர் மைதானங்களில் மட்டும் 7 சதங்களை அடித்துள்ள ரோஹித், முதல் முறையாக ஓவர்சீஸ் சதத்தை இன்று பதிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், அதிகபட்சமாக கடந்த 2019-ம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் 212 ரன்கள் எடுத்திருந்தார்.