மாதவிடாய் என்பதே மாதாமாதம் 28 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும் இயற்கை சுழற்சி. ஆனால் சில பெண்களுக்கு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும்போது நாம் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். ஏனெனில் அதற்கான சரியான காரணத்தை அறிந்து சரியான வைத்தியத்தை ஆரம்ப நிலையிலேயே செய்யும்போது தேவையற்ற பெரிய நோய் உபாதைகளைத் தவிர்க்கலாம்.


காரணம் என்ன?
பொதுவாக மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் ஏற்பட ஹார்மோன் இம்பேலன்ஸ் அதாவது ஹார்மோன் சமநிலையின்மை, பாலி சிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம், கருப்பை நார்த்திசுக்கடிகள் (ஃபைப்ராய்ட்ஸ்) ஆகியன காரணமாகச் சொல்லப்படுகின்றன. அதேவேளையில் பெண்களின் வயதும் முக்கியத்துவம் பெறுகிறது. வயதிற்கு ஏற்ப இதனை நாம் அசட்டை செய்யாமல் மருத்துவரை அணுகுவது அவசியம். 


இளம் வயதில் இப்படி நடக்கிறதா?
கர்ப்பவதிகள் இதுபோன்ற சிக்கலை ஏதிர்கொள்ளலாம். அரிதினும் அரிதாக சிலருக்கு கர்ப்ப காலத்திலும் ரத்தப்போக்கு ஏற்படும். யோனியில் சிறிதாக ரத்தக்கசிவு கர்ப்பகாலத்தில் இருக்கும். அது சாதாரணமானது. ஆனால் அதுவே சற்று அதிகமானால், தொடர்ந்து அவ்வாறே ஆனால் மருத்துவரை அணுக வேண்டும்.


பாலி சிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம்:
பி.சி.ஓ.டி., பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் இதனை பி.சி.ஓ.எஸ். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்றும் அழைக்கின்றன. சராசரியாக 12 வயது முதல் 45 வயதிலான பெண்களில் 27% பேருக்கு இந்த உபாதை இருக்கிறது.
பெண்ணின் ஹார்மோன் அளவு மாறுபடும் போது இந்த உபாதை ஏற்படுகிறது. பிசிஓடி பிரச்சினை இருக்கும் பெண்களுக்கு ஆண் ஹார்மோன் ஆண்ட்ரோஜன் அதிகமாக சுரக்கிறது. இதனால் அவர்களின் ஓவரிக்கள் கருமுட்டை உருவாக்குவதில் சிரமப்படுகிறது. இந்த மாதிரியாக ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் வருகிறது. இதனால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்பு உருவாகிறது. 


ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி: கருமுட்டை உருவாவதில் சிக்கல் ஏற்படுவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. ஒரு சில பெண்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை 20 நாட்களுக்கு ஒருமுறை கூட மாதவிடாய் ஏற்படுகிறது.பிசிஓடி பிரச்சனை உள்ள பெண்கள் வெள்ளி டம்ப்ளரில் தண்ணீர் அருந்தலாம், வெள்ளி நகை அணிந்து கொள்ளலாம். வெள்ளி உடலுக்குக் குளிர்ச்சி தரும். மூட் ஸ்விங்கில் இருந்து பாதுகாக்கும்.


தைராய்டும் காரணம்:
தைராய்டு(Thyroid) நமது கழுத்துப் பகுதியில் பட்டர்ஃபிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி.  இது சுரக்கும் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். தைராய்டு ஹார்மோன் சமநிலையின்மையாலும் இப்பிரச்சனை ஏற்படலாம்.


காண்ட்ராசெப்டிவ் பில்ஸ்:
ஒரு பெண் வாய்வழி கருத்தடை மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொண்டு வரும் போது அதாவது மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் சரியாக எடுகாமல் தாமாகவே உட்கொள்ளும் போது இந்த மாதிரியான பிரச்சனை ஏற்பட்டு இருமுறை மாதவிடாய் வரும்.


பிறப்புறுப்பு தொற்று:
பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்பு தொற்று கூட ஒரு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவதற்கான காரணமாக அமைகிறது. இது அரிதானது என்றாலும் இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.


மெனோபாஸ்:
40 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படலாம். அப்போது சீரற்ற மாதவிடாய் சுழற்சி அதிக உதிரபோக்கு, மாதவிடாய் நிற்கும் நிலையில் பெண்களுக்கு அடிக்கடி இரத்த போக்கு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதவிர அடிக்கடி பயணம் மேற்கொள்ளுதல், அதிகப்படியான உடற்பயிற்சி செய்தல் மன அழுத்தம் கொள்ளுதல் ஆகியனவற்றாலும் இரண்டு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படலாம்.