தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, தற்போது இரண்டு பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பாக அரசு சார்பில் மாநில முழுவதும் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பருவமற்ற காலங்களில் பெய்யும் மழையால் ஆங்காங்கே தேங்கும் நீரில் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. பகல் நேரத்தில் கடிக்கும் இந்த வகை கொசுக்கள்தான் டெங்கு காய்ச்சலுக்கு காரணமாக அமைகிறது.  


இந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் திடீர், அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, கடுமையான மூட்டு மற்றும் தசை வலி, சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.




சுகாதாரத் துறையின் நடவடிக்கைகள்


இந்நிலையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக சுகாதாரத் துறை சார்பில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். அதில், மழைப் பொழிவு காரணமாக தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் பாதிப்புகளும், குறிப்பாக டெங்கு காய்ச்சலும் அதிகமாக பதிவாகி வருகிறது. ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் தமிழ்நாடு பொது சுகாதார விதிகளின்படி அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக உள்ளது.


எனவே, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  அவ்வாறு இல்லாவிடில் அவர்களுக்கு உரிய விதிகளின் படி அபராதம் விதிக்கப்படும்.


அதேபோன்று கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொது மக்கள், நிறுவனங்கள், நில உரிமையாளர்கள், கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறலின் தன்மையைப் பொருத்து அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




மயிலாடுதுறை மாவட்ட டெங்கு நிலவரம்


இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தாண்டு கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டள்ளது. அதில் 77 பேர் சிகிச்சை பெற்று பூரண  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மாவட்டத்தில் சீர்காழி  மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில் 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் 12 பேருக்கும், இந்த மாதம் மட்டும் 5 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் டெங்கு உயிரிழப்பு ஏதும் இல்லை. டெங்கு பாதிப்பு பரவலை அடுத்து அடுத்து மாவட்டம் முழுவதும் அரசு சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் தேவையில்லாத தூக்கி எறியப்பட்ட டயர்கள், தேங்காய் ஓடுகள், பழைய பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காதவாறு கண்காணித்து அதனை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


மேலும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் அஜித் பிரபு குமார் மேற்பார்வையில், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுநர் மற்றும் தர மருத்துவ அலுவலர் மருத்துவர் பிரவீன் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.