எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டத் தொடங்கி உள்ளனர். அதற்கு மகிழ்ச்சி. விரைந்து கட்டித்தர கோரிக்கை விடுக்கிறோம் என மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மதுரையில் அமைச்சர் மா.சு
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நலம் மற்றும் ஆராய்ச்சி மையக் கட்டட பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் அரசு இராசாசி மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் உயர் மருத்துவ உபகரணம் (DEXA ஸ்கேன் கருவி) திறந்து வைத்தார். நிகழ்வில் அமைச்சர் பி.மூர்த்தி, அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு
பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் "முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை கட்டமைக்கப்பட்டு உள்ளது. மதுரையில் ஹோமியோபதி மருத்துவ கல்லூரிக்காக புதிய கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்காக 406 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மற்றும் பாலரெங்காபுரம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைக்காக 36 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் அமைக்கப்படும்.
டெங்கு பாதிப்பு
திமுக அரசு பொறுப்பேற்றப்பட்ட பின்னர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில்
419 கோடி ரூபாய் அளவிற்கு மருத்துவ திட்டப்பணிகள் மேற்க் கொள்ளப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் முதன் முறையாக முதுகெலும்பு சிகிச்சை அளிக்க ஸ்கேன் அமைக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் தேவையான மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். வடகிழக்கு பருவமழைக்காக இந்தாண்டு 25,460 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 10,48,000 மக்கள் பயன்பெற்று உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 523 நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. அதில், 8,21,422 மக்கள் பயன்பெற்று உள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 9 பேர் உயிரிழந்தனர். 9 பேரும் டெங்கு மட்டுமல்லாமல் இணை நோய்கள் பாதித்தும் உயிரிழந்தனர். மேலும், மிகவும் காலதாமதமாக சிகிச்சை எடுத்து கொண்டதால் உயிரிழக்கும் சூழல் உருவானது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
எய்ம்ஸ் விரைவில் முடிக்க வேண்டும்
இந்தியாவில் பிற மாநிலங்கள் உட்பட மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2017 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. 2019 ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார். திமுக அரசு பொறுப்பு ஏற்றவுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நிலம் மாற்றி வழங்கப்பட்டது. திமுக தலைமையிலான தமிழக அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒன்றிய அமைச்சரை தொடர்ச்சியாக சந்தித்து வலியுத்தினேன். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 200 மாணவர்கள் இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஒரு ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்றால் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்காமலேயே மருத்துவப் படிப்பை முடிக்கக்கூடிய சூழல் ஏற்படும். ஜப்பான் டோக்கியோ சென்று எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியதன் விளைவாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டத் தொடங்கி உள்ளனர். அதற்கு மகிழ்ச்சி. விரைந்து கட்டித்தர கோரிக்கை விடுக்கிறோம். விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என நம்புவோம்" என கூறினார்.