சமீபத்தில் கேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் ஷவர்மா விவகாரத்தில் பரிசோதனை செய்யப்பட்ட ஷவர்மாவில் ஷிஜெல்லா, சால்மோனெல்லா ஆகிய பாக்டீரியா வகைகள் கண்டறியப்பட்டதாக கேரள மாநில அரசு தெரிவித்தது. கடந்த மே 1 அன்று இந்த ஷவர்மாவைச் சாப்பிட்டதால் சுமார் 58 பேர் பாதிக்கப்பட்டதோடு, 16 வயது சிறுமி உயிரிழந்தார். 


உலகம் முழுவதும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துவதன் முன்னணி காரணியாக இருக்கும் ஷிஜெல்லா, எண்டெரோபாக்டெர் வகையைச் சேர்ந்த பாக்டீரியாவாகும். .ஷிகெல்லோசிஸ் என்றழைக்கப்படும் ஷிஜெல்லா தொற்று குடல் பகுதியில் ஏற்படுவதோடு, ஒட்டுமொத்தமாக செரிமானத்தையே பாதிக்கச் செய்கிறது. உலகம் முழுவதும் சுமார் 18.8 கோடி பேரிடையே பாதிப்புகளை ஏற்படுத்தும் இதே நோய் சுமார் 10 லட்சம் மரணங்களுக்குக் காரணமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வளர்ந்த நாடுகளில் ஷிகெல்லோசிஸ் பாதிப்புகள் சுமார் 15 லட்சம் வரை பதிவாகின்றன. 



காரணங்களும், அறிகுறிகளும்!


ஷிஜெல்லா தொற்று ஏற்படுவதற்கான முதன்மைக் காரணம் ஷிஜெல்லா தொற்று ஏற்பட்ட நபரோடு தொடர்பு கொள்வதே ஆகும். ஷிகெல்லா பாக்டீரியா என்பது வயிற்றுக்குள் நுழைந்து, சிறுகுடலில் பெருகுகிறது. அதனைத் தொடர்ந்து பெருகுடலில் நுழையும் ஷிஜெல்லா பாக்டீரியா வயிற்று வலியையும், அதனைத் தொடர்ந்து வயிற்றுப் போக்கையும் உருவாக்குகிறது. தொற்று ஏற்பட்டிருக்கும் பொருள்களைத் தொடுவது, அதே பாக்டீரியா கலந்த உணவை உண்பது, ஷிஜெல்லா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் பாலியல் உறவு கொள்வது முதலான காரணங்களால் ஷிஜெல்லா பரவுவதாகக் கூறப்படுகிறது. 


ஷிஜெல்லா தொற்றின் அறிகுறிகளாகக் கூறப்படுபவை:


1. வயிற்றுப் போக்கு - ரத்தம், சளி ஆகியவற்றோடு வெளியேறுதல்
2. வயிற்று வலி, வயிற்றில் தசை பிடிப்பு
3. காய்ச்சல்
4. குமட்டல்
5. வாந்தி



தடுப்பது எப்படி?


ஷிஜெல்லா தொற்றைத் தடுக்க கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்:


1. கைகளை அடிக்கடி சோப் பயன்படுத்தி சுமார் 20 விநாடிகள் வரை கழுவ வேண்டும். 
2. பயன்படுத்தப்பட்ட டயாபர்களைச் சரிவர வீசி எறிய வேண்டும். 
3. உங்களுக்கு வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிற அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால், நீங்கள் பிறருக்குச் சமையல் செய்யக் கூடாது.
4. குளம், ஏரி, நீச்சல் குளங்கள் முதலான இடங்களில் இருந்து நீரை எடுத்து பருகக் கூடாது. 
5. நன்கு காய்ச்சப்பட்டு, வடிகட்டப்பட்ட குடிநீர் குடிப்பது ஷிகெல்லா தொற்றில் இருந்து பாதுகாப்பை வழங்கும். 
6. சமையல் செய்யும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது, சுத்தமான பாத்திரங்களைப் பயன்படுத்துவது, சமையல் பொருள்களையும், காய்கறிகளையும் சுத்தமாக கழுவி பயன்படுத்துவது ஆகியவை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். 
7. அசுத்தமான உணவகங்களிலும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத இடங்களிலும் உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.