கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துக்கொண்டார். முன்னதாக நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்.. "இலங்கை விவகாரத்தில் இந்தியா உதவி செய்கிறோம் என்ற பெயரில் இன்னொரு நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பார்க்கிறார்கள் இதனை சிங்கள மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ் தலைவர் போல் பேசி வருகிறார் , ஆளுநர் ஆர் என் ரவி ஆபத்தானவர் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் பிற நாடுகளின் உதவியுடன் ஆயுத படைகளை கொண்டு தமிழ் தேசிய போராட்டத்தை நசுக்கியவர் ராஜபக்சே ஆவார். இந்தியாவில் இது போன்ற நிலை வந்து மக்கள் விரட்டியடிப்பதற்கு முன் பா.ஜ., தங்கள் போக்கை மாற்றி கொள்ள வேண்டும் என்றார். மேலும் தமிழ்நாட்டின்  ஆளுநர்  அரசியல் பேசுகிறார், அரசியல் வாதியை போல் பேசுகிறார் அதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மிகவும் ஆபத்தானவர் என்கிறேன்" என தெரிவித்தார்.

 



 

மேலும் தமிழ்நாட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சிறுபான்மை மக்களை முன்னிறுத்தும் இயக்கம், மக்களுக்கு எதிராக இல்லை. ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்., தலைவரை போல் பேசியுள்ளார். ஆளுநர் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது.  இதனை தொடர்ந்து கீ.வீரமணி மீது தேசிய எஸ்.சி , எஸ்.டி ஆணையம் வழக்கு பதிய உத்தரவு குறித்த கேள்விக்கு, "இது பா.ஜ.க செய்யும் அரசியல் சித்து விளையாட்டு. தமிழக அரசியலில் இன்னும் பல அரசியல் சார்பற்றவர்களை சர்ச்சைக்குள்ளாக்குவது தான் அவர்களது திட்டம். குறிப்பாக அம்பேத்கர் குறித்து இளையராஜா எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை. சங்பரிவார், இளையராஜாவை துருப்புச்சீட்டாக பயன்படுத்துகிறார்கள்" என கூறினார்.