ஆயுர்வேத சிகிச்சை என்றவுடனேயே முதலில் சிந்தைக்கு எட்டுவது என்னவோ கேரளா தான். அன்றைய பிரதமர் வாஜ்பாய் தொடங்கி இன்றைய பிரபலங்கள் வரை ஆயுர்வேத சிகிச்சை தேவைப்பட்டால் உடனே டிக்கெட் எடுப்பது கேரளாவுக்கு தான். பிரமாண்டமாக பல லட்சங்கள் செலவழித்து சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளும் உண்டு ஒரு சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு இலவசமாக தரமான சிகிச்சைகள் வழங்கும் கூடங்களும் உண்டு. சரி இதெல்லாம் தெரிந்ததுதானே எனக் கேட்கலாம். யெஸ் மக்களே. ஆனால் புதுசு என்னன்னா உலகிலேயே முதன்முறையாக கேனபிஸ் எனப்படும் கஞ்சா


இலையை ஆயுர்வேத சிகிச்சைக்காகப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கிறது ஒரு கேரள வைத்தியசாலை.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளா குளக்காட் கிராமத்தில் உள்ள பூந்தோட்டம் ஆயுர்வேதாஸ்ரமம் கூடத்தில் தான் இந்த ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இருந்து சிகிச்சை பெற மக்கள் வருவது உண்டு.


ஆசியாவிலேயே முதன்முறை:


ஆனால் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆஸ்ரமத்தில் முதன்முறையாக கஞ்சா இலைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்போதைக்கு ஆசியாவிலேயே இங்கு மட்டும் தான் இந்த சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பூந்தோட்டம் என்றாலே பெயரே உணர்த்திவிடுகிறது அல்லவா அதற்கேற்ப இந்த ஆசிரமும் பச்சைப்பசேலன்ற புல்வெளிகளும் விதவிதமான மரம் செடி கொடிகளும் கொண்டதாக இருக்கிறது. கஞ்சாவின் மருத்துவ குணங்கள் பல ஆண்டுகளாகவ்வே இந்தியாவில் ஒரு விவாதப் பொருளாக உள்ளது. கஞ்சா என்பது தடை செய்யப்பட்ட பொருளாக இருந்தாலும் கூட அதன் பயன்பாடு விவாதப் பொருளாக இருக்கிறது. பூந்தோட்டம் ஆயுர்வேதம் சிகிச்சை மையம் மற்றும் ஆராய்ச்சி நிலையமானது ஆயுர்வேதாச்சார்யா வைத்யா பிஎம்எஸ் ரவீந்திரநாத் மற்றும் லதா ரவீந்திரநாத்தால் நடத்தப்படுகிறது. இவர்களுடன் மும்பையின் ஹெம்ப் நிறுவனம் போஹிகோவும் கைகோர்த்துள்ளது. இவர்கள் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின்னரே கஞ்சா செடியை மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதை கொண்டுவந்துள்ளனர். கஞ்சாவை உணவில் சேர்த்து கொடுக்கின்றனர். கஞ்சா எண்ணெய், சீரம் ஆகியனவற்றை எப்படி மருந்துகளாகப் பயன்படுத்துவது என்று ஆராய்ச்சி செய்து பயன்படுத்துகின்றனர்.


நன்மை அறிந்து பயன்படுத்துவது நலம்:


உண்மையில், கஞ்சா செடியின் அனைத்து பாகங்களும் பயன்பாட்டுக்குரியவை. அதிலும் குறிப்பாக இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வலிநிவாரணியாகவும், மயக்க மருந்தாகவும், கஞ்சா பயன்படுத்தப்பட்டுள்ளது. கஞ்சாவில் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருந்தாலும், இதை முறைகேடாகப் பயன்படுத்துவது மற்றும் போதைப்பொருளாகப் பயன்படுத்துவதைத் கட்டுப்படுத்துவதற்காக இது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கஞ்சாவில் உள்ள ஒரு பிரத்யேக ரசாயனம், மூளையை பாதிக்கக்கூடியது. இது வலி நிவாரணியாக செயல்படுகிறது. முறைப்படி பயன்படுத்தினால், கஞ்சா பல மருத்துவ நன்மைகளைக் கொடுக்கும். பல்வேறு வடிவங்களில் பயபடுத்தப்படும் கஞ்சா பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. எந்தவொரு விஷயத்திலும் நன்மையும், தீமையும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இருக்கும் என்பது உண்மை. அதனாலேயே அதனை அறிந்து பயன்படுத்துவது நமக்கு நன்மை சேர்க்கும்.


அதுதான் ஆயுர்வேத சிகிச்சைக்கே பயன்படுத்துகிறார்களே என்று எங்காவது சட்டவிரோதமாக கஞ்சா வாங்கி பயன்படுத்தினால் கம்பி எண்ண நேரிடும் என்பதை மறந்துவிட வேண்டாம். ஏனெனில் கஞ்சா என்பதில் பலவகைகள் உண்டு. எந்த இலையை எவ்வளவு பயன்படுத்தினால் மருந்து எது எல்லை தாண்டுதல் என்பது மருத்துவர்களுக்குத் தான் தெரியும்.