95வது ஆஸ்கர் விருதுகளில் (Everything Everywhere All at Once) 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸும்' அடுத்தடுத்து விருதுகளைப் பெற்றதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உலக சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் அறிவிக்கப்பட்ட சிறந்த துணை நடிகருக்கான விருது கி க்யூ க்வோனுக்கு எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்திற்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அதே படத்தில் நடித்த நடிகை ஜேமி லீ கர்ட்டிஸுக்கு சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டது. 


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தை டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் ஆகிய 2 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 10.74 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது. தொடர்ந்து இந்த படம் 10 ஆஸ்கர் விருதுகளில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி தற்போது 7 ஆஸ்கர்களை வென்றுள்ளது.


ஆஸ்கர் விருதுகளில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற ஆசிய வம்சாவளியான இரண்டாவது நடிகர் என்ற பெருமையை பெற்றார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு சிறந்த துணை நடிகருக்கான விருதை ஆசியாவை சேர்ந்த கி க்யூ க்வோன் பெற்றுள்ளார். 


கி க்யூ க்வோன்: 


குழந்தை நட்சத்திரமாக ஒரு காலத்தில் நடித்த கி க்யூ க்வோன் தனக்கு நடிப்பில் பெரிய எதிர்காலம் இல்லை என்று கருதி 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார்.


எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படத்திற்கு தற்போது சிறந்த துணை நடிகராக ஆஸ்கர் விருது வென்ற கி க்யூ க்வோன் மேடையில் உணர்ச்சி வசப்பட்டு அழ தொடங்கினார். அப்போது பேசிய அவர், “எனது அம்மாவிற்கு தற்போது 84 வயது ஆகிறது. நான் விருது வாங்குவதை அவர் பார்த்து கொண்டு இருப்பார். அம்மா, நான் ஆஸ்கர் விருதை வென்றேன்” என அழ தொடங்கினார். 






தொடர்ந்து பேசிய அவர், “ எனது பயணம் ஒரு படகில்தான் தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் அடைக்கல முகாமில்தான் கழித்தேன். எப்படியோ, நான் இங்கே ஹாலிவுட்டின் மிகப்பெரிய மேடையில் வந்துவிட்டேன். வாழ்க்கையில் வெற்றி பெறுவது போன்ற தைகள் திரைப்படங்களில் மட்டுமே நடக்கும் என்கிறார்கள். இது எனக்கு நடக்கிறது என்று என்னால் நம்ப முடியவில்லை. இது அமெரிக்க கனவு! “ என்று தெரிவித்தார். 


“ Everything Everywhere All at Once” திரைப்படம் ஆஸ்கரில் சிறந்த படம், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இயக்குநர், திரைக்கதை, எடிட்டிங் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.