ஐஐடி மெட்ராஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து சிறுநீரை அடிப்படையாகக் கொண்ட காசநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை புதிதாக உருவாக்க உள்ளது. 


சிறுநீரக அடிப்படையில் காசநோய் பரிசோதனை:


இதுதொடர்பான அறிவின்படி, ”சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), பொதுத்துறை நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC Re)-வுடன் இணைந்து, சிறுநீர் அடிப்படையிலான காசநோய் கண்டறிதல் அல்லது பரிசோதனையை உருவாக்க உள்ளது. பல்வேறு நோய்களைக் கண்டறிய தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரத்த குளுக்கோஸ் மானிட்டர்கள் போன்ற பாயிண்ட் ஆப் கேர் கருவிகளைக் காட்டிலும், புதிதாக உருவாக்கப்பட உள்ள சிறுநீர் அடிப்படையிலான காசநோய் பரிசோதனைக் கருவி விரைவாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-வின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியில் இருந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் மத்திய- மாநில அரசுகளின் சுகாதாரத் துறைகளும் முதன்மை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை சுகாதார மையங்களும் பயன்பெறும். இந்த கூட்டுமுயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐடி மெட்ராஸ் டீன் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் இயக்குநரும் பொதுமேலாளருமான மதுலிகா பாஸ்கர் ஆகியோர் கடந்த பிப்ரவரி 10ம் தேதி கையெழுத்திட்டனர். பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் 180-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து தற்போது வரை ரூ.250 கோடி திரட்டப்பட்டு உள்ளது. இதனைக் கொண்டு 200- க்கும் அதிகமான கூட்டு முயற்சித் திட்டங்களில் ஐஐடி மெட்ராஸ் ஈடுபட்டுள்ளது.


தற்போதையை  பரிசோதனைகள்:


நாட்டின் மிகப் பரவலான தொற்றுநோய்களில் ஒன்றான காசநோய்க்கு 2025-ம் ஆண்டுக்குள் முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இருப்பினும், கொரோனா காரணமாக இந்த முயற்சிகள் தடைபட்டுள்ளன. காசநோய் பரவாமல் கட்டுப்படுத்த அதனை சரியான நேரத்தில், விரைவான மற்றும் அணுகக் கூடிய முறையில் கண்டறிவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஜென்எக்ஸ்பர்ட் (GeneXpert), செல்வளர்ப்பு போன்ற தற்போதைய நுட்பங்களைப் பொருத்தவரை அவை வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பைக் கொண்டவை. தவிர கூடுதல் செலவு பிடிப்பதுடன், பரிசோதனைக்கு ஒருவாரமோ அல்லது இரு வாரங்களோ ஆகின்றன.


புதிய பரிசோதனையின் நன்மைகள்:


விரைவான, உணர்திறன் மிக்க இந்த பரிசோதனை முறையின் வாயிலாக, சந்தேகத்திற்கு இடமான நோயாளிகளில் உண்மையாவே பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்களை விரைவாகக் கண்டறிவதுடன் உரிய நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளித்து நோயைக் கட்டுப்படுத்த முடியும். இப்பிரச்சனைக்குத் தீர்வு காண ஜிஐசிரி நிறுவனத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில், ஐஐடி மெட்ராஸ் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் வி.வி.ராகவேந்திர சாய் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.


புதிய தொழில்நுட்பம்:


புதுமையான பிளாஸ்மோனிக் ஃபைபர் ஆப்டிக் பயோசென்சார் (P-FA8) தொழில்நுட்பத்தை ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள பயோசென்சார்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கி வருகின்றனர். சிறுநீரில் உள்ள காசநோய் உயிரியலைக் கண்டறிவதற்கான ஆய்வக அளவிலான கருத்து ஆதாரத்தை அவர்கள் நிறுவியுள்ளனர். lipoarabinomannan (LAM) என்றழைக்கப்படும் இந்த ஆய்வின் முடிவுகள் புகழ்பெற்ற பயோசென்சார்ஸ் அண்ட் பயோஎலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி இதழில் கட்டுரையாக வெளிவந்துள்ளது.


இவற்றுடன், ஃபைபர் ஆப்டிக் சென்சார் ஆய்வுகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த தொழில்நுட்பம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள இரு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. சிறுநீர் அடிப்படையில் காசநோயைக் கண்டறிய அடுத்தகட்ட நடவடிக்கையாக, காசநோய் பாதித்த நோயாளியின் மாதிரிகள் மூலம் P-FAB-ஐக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் முறையான மருத்துவ சரிபார்ப்பு ஆய்வி மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHCs) இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் எளிதாக்குவதுதான் ஆராய்ச்சித் திட்டத்தின் தற்போதைய முக்கியமான பணியாகும்.


சிறுநீர் அடிப்படையில் காசநோய் பரிசோதனை/நோய் கண்டறிதல் என்ற கருத்து ஆதாரத்தை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், நோய்கண்டறியும் கருவி உற்பத்தியாளர்களுக்கும் உரிய தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். பைபர் ஆப்டிக் சென்சார் ப்ரோப் ஃபேப்ரிகேஷன், ஆப்டோ எலக்ட்ரானிக் ரீட்அவுட் சாதனங்களுக்கான தொழில்நுட்பங்களுக்கு ஐஐடி மெட்ராஸ் ஏற்கனவே காப்புரிமை பெற்றுள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களின் அடிப்படையில் தனித்தனியாக அறிவுசார் சொத்துரிமைக்கான உரிமங்கள் வழங்கப்படும்.  அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த தயாரிப்பு பரந்த அளவில் பயன்படுத்தும் வகையில் தயாராகிவிடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.