Single Shankarum Smartphone Simranum Review:  அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் இயக்கத்தில், “அகில உலக சூப்பர்ஸ்டார்” சிவா,  மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன், பாடகர் மனோ, மாகாபா ஆனந்த், திவ்யா கணேஷ், கேபிஒய் பாலா, ஷாரா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்” . லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


கதையின் கரு 


மொரட்டு சிங்கிளாக இருக்கும் இளைஞர்களின் கவலையை போக்க artificial intelligence தொழில்நுட்பத்தில் ஷாரா பெண்ணின் உணர்வுகள் கொண்ட ஸ்மார்ட்போன்  ஒன்றை கண்டுபிடிக்கிறார். அதை பகவதி பெருமாள் சந்தையில் பல கோடிக்கு விற்க பிளான் போடும் நேரத்தில் அது எதிர்பாராத விதமாக சிவாவின் கைகளுக்கு செல்கிறது. அந்த செல்போன் மூலம் சாதாரண உணவு டெலிவரி பையனாக வரும் சிவாவின் பொருளாதார மதிப்பு உயர்கிறது.


தான் ஆசைப்பட்டதை அந்த செல்போன் மூலம் சிவா தீர்த்துக் கொள்ள பதிலுக்கு அந்த ஸ்மார்ட் போனில் இருக்கும் பெண் சிவாவின் காதலை கேட்கிறார். இதற்கு மறுக்கும் சிவாவிற்கு அந்த ஸ்மார்ட்போனால் என்ன ஆபத்து ஏற்படுகிறது என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா .


நடிப்பு எப்படி?


ஷங்கராக சிவா, ஸ்மார்ட்போன் பெண் “சிம்ரன்” ஆக மேகா ஆகாஷ், துளசியாக அஞ்சு குரியன், சிவாவின் அப்பாவாக வரும் பாடகர் மனோ என அனைவரும் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர். 


குறிப்பாக சிவா அகில உலக சூப்பர் ஸ்டாராக மீண்டும் திரைக்கு திரும்பி உள்ளார். தன்னுடைய உடல் மொழியாலும் ஒன் லைனர் வசனங்களாலும் படம் பார்க்கும் ஆடியன்ஸை சிரிக்க வைத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே லாஜிக் பாக்காதீங்க என கார்டு போட்டு கதை தொடங்குகிறது. அதனால் நாமளும் லாஜிக்கே பார்க்காமல் கதையோடு ஈசியாக ஒன்றி விடுகிறோம். வருங்காலத்தில் தொழில்நுட்பத்தில் இதெல்லாம் நடக்குமா? என்றால் அது தொழில்நுட்பங்களுக்கே வெளிச்சம். ஆனால் இப்படி எல்லாம் வந்து விட்டால் என்ன ஆகும் என்பதை செம ஜாலியாக சொல்லி இயக்குநர் சொல்லியிருக்கிறார். 


வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இதேபோல் ஹீரோயின்களான மேகா ஆகாஷ், அஞ்சு குரியனுக்கு இது நல்ல கம்பேக் படமாக அமைந்துள்ளது. என்னதான் தொழில்நுட்ப படைப்பாக இருந்தாலும் மேகா ஆகாஷ் தன் காதலை வெளிப்படுத்தும் இடத்திலும், அது நடக்காமல் போனால் ஒரு சராசரி பெண்ணாக தான் என்னவெல்லாம் செய்வேன் என்பதையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். 


நிஜக் காதலியாக வரும் அஞ்சு குரியன் ரசிக்க வைக்கிறார். ஆனால் அவருக்கு கதையில் அதிகமாக காட்சிகள் இல்லை. மனைவியை இழந்த கணவராக வரும் பாடகர் மனோ அடுத்த கல்யாணத்திற்கு பெண் தேடும் படலம் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. மேலும் கேபிஒய் பாலா, கிளைமேக்ஸ் காட்சியில் வரும் மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சேசு ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். இவர்களை தவிர்த்து மாகாபா ஆனந்த், திவ்யா கணேஷ் கேரக்டர்கள் நன்றாக கையாளப்பட்டிருக்கிறது. தொழில்நுட்பத்தை மையப்படுத்திய படம் என்றாலும் அந்த கிளைமேக்ஸ் காட்சி கதையோடு ஒன்றவே இல்லை. 


சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் பார்க்கலாமா? 


தொடர்ந்து ஆக்‌ஷன், காதல் படங்கள் வெளியாகும் மத்தியில் ஒரு காமெடி படம். ஆக வித்தியாசமான கதையோடு வந்திருக்கும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் கண்டிப்பாக பார்க்கலாம்.