பற்பசை விளம்பரங்களில் பொதுவாகக் கேட்கப்படும் கேள்வி நமது ஈறுகள் எத்தனை வலுவாக இருக்கிறது என்பதுதான். பற்கள் வலுவாக இருந்தாலும் ஈறுகளில் ரத்தம் கசிவது ஈறு வீக்கம் , அதன் அதிக உணர்திறன் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். அதனால் சில அடிப்படைச் சந்தேகங்களும் ஏற்படுவது உண்டு. 


ஈறுகள் ஆரோக்கியம்:


உதாரணத்துக்கு, நன்றாக பல் துலக்கினால் ஈறுகளில் ரத்தம் வருமா? உங்கள் பற்களின் சென்ஸிட்டிவிட்டி உங்களுக்கு பிடித்த ஐஸ்கிரீமை சாப்பிடுவதைத் தடுக்கிறதா? உங்கள் ஈறுகள் வீங்கியிருப்பதால் உங்களால் சிரிக்க முடியவில்லையா? 


உங்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஆரோக்கியமான ஈறுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும் அவை உறுதியானவையாகத் தென்படும். உங்கள் வாழ்க்கை முறை உங்கள் ஈறு ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும், இதில் உங்கள் உணவு, வயது மற்றும் வாய்வழி உடல் பராமரிப்பு ஆகியவையும் அடங்கும். உங்கள் ஈறுகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை எப்படி அறிவது? 


"உங்கள் ஈறுகளில் உணர்திறன், வீக்கம், சிவந்துபோதல் அல்லது இரத்தப்போக்கு போன்ற பிரச்னைகள் இருந்தால்,அவை ஆரோக்கியமாக இல்லை என்பதற்கான அறிகுறியாகும்" என்கின்றனர் பிரபல பல் நரம்பியல் நிபுணர்கள். 


ஈறுகளைப் பராமரிக்க சில அடிப்படைக் குறிப்புகள்: 


சரியாக பல் துலக்குங்கள்


ஆரோக்கியமான வாய் மற்றும் ஈறுகளைப் பெறுவதற்கு பல் துலக்குதல் முக்கியமாகும். ஸாஃப்ட் பிரிஸ்ட்ஸைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது உங்கள் பற்களை துலக்கவும். மேலும் ஃப்ளூரைடு உள்ள பற்பசையைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவும். பல் துலக்கும்போது 45 டிகிரி கோணத்தில் உங்கள் ப்ரஷை வைத்துத் துலக்கவும். துலக்கும்போது உங்கள் பற்களை தேயும் அளவுக்குத் துலக்காமல் குறுகிய அளவு அழுத்தம் கொடுத்துத் தேய்க்கவும்.


தினமும் ஃப்ளோஸ் செய்யவும்:


ஒவ்வொரு நாளும் ஃப்ளோஸ் செய்வது உங்கள் பற்களுக்கு இடையில் சிக்கிய உணவைத் தளர்த்த உதவுகிறது, பிரஷ்ஷைக் கொண்டு அகற்றக் கடினமாக இருக்கும் உணவுகளை அகற்ற இது உதவும்.உணவு நீண்டநேரம் பற்களில் தங்கும்போது அது அங்கே பாக்டீரியா படியக் காரணமாக இருக்கிறது. அது உங்களுக்கு பிரச்னையை உண்டு பண்ணலாம். இதனை வழக்கமான பல் துலக்குதல் மூலம் அகற்ற முடியாது. ப்ளாஸ் செய்வது ஒருபுறம் இருந்தாலும் உங்கள் பல் மருத்துவரை அணுகுவது நல்லது. 


புகைபிடிப்பதை நிறுத்துதல்


புகைபிடித்தல் மற்றும் பான், குட்கா போன்ற பிற புகையிலை பொருட்கள் ஈறு நோய்க்கு வழிவகுக்கும். புகையிலை இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. 


உணவில் கவனம் தேவை:


நாம் உண்ணும் எந்த உணவும் நம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சர்க்கரை சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களால் பற்களில் துவாரங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் புரதங்கள் உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்கள் உணவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேர்ப்பது உங்கள் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.


வழக்கமான பல் பரிசோதனைகள்


பல் பரிசோதனைகளில் வாயை சுத்தம் செய்வதும் அடங்கும். தொழில்முறையில் தேர்ந்த நிபுணர்கள் பற்களில் உள்ள கறைகளை அகற்ற தேர்ந்த கருவிகளைப் பயன்படுத்துவார்கள். இது நாம் ஃப்ளாஸ் செய்வது பல்துலக்குவது ஆகியவற்றில் தப்பிக்கும் பாக்டீரியாக்களை சுத்தமாக அகற்ற வழிவகை செய்யும். இவ்வாறு குறைந்தது ஆறு மாதத்துக்கு ஒரு முறையேனும் செய்வது அவசியம்.