நமது உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளுள் ஒன்றாக கண் இருக்கிறது. கண் குறித்து பிரச்னைகளை சாதாரணமாகக் கருதுவது தவறானது. மேலும், பார்வையில் குறைபாடு ஏற்படும் போதோ, கண்ணில் சிரமங்கள் ஏற்பட்டாலோ மருத்துவ உதவியை நாடுவது முக்கியது. சமீபத்திய ஆய்வுகளின் படி, சமமான சத்துகளைக் கொண்ட உணவு வழிமுறை, அதிகளவிலான உடற்பயிற்சி ஆகியவை கண்ணின் நலனுக்குத் தகுந்தவை எனக் கூறப்பட்டுள்ளது. கண்களை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கான வழிமுறைகளை இங்கே கொடுத்துள்ளோம்... 


1. போதிய தூக்கத்தை எடுத்துக் கொள்ளவும்!


நாம் எந்நேரமும் விழித்துக் கொண்டிருக்கும் போது, கண்களுக்கு அதிகளவில் வேலைப்பளு இருக்கும். எனவே கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். நாம் எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் போதும், கண்கள் தம் பணியைச் செய்து கொண்டே இருக்கின்றன. மேலும், தூக்கம் குறைந்தால் கண்களில் சோர்வு ஏற்படலாம். மேலும், கண் எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், கண்களில் ஈரப்பதம் குறைதல், கண்களில் கண்ணீரின் அளவும் பெருகுதல், பார்வையில் தடுமாற்றம், வெளிச்சம் காணும் போது கூசுதல், கழுத்து, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் வலி முதலானவை இதன் விளைவுகள். எனவே வயதுக்கு வந்த பெரியவர்கள் அனைவரும் ஒவ்வொரு இரவும் 7 முதல் 8 மணி நேரங்கள் வரை உறங்க வேண்டும். 



2. புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாக்கும் கண் கண்ணாடிகள் அணிவது


சூரிய வெளிச்சம் இருக்கும் போது வெளியே செல்ல நேர்ந்தால் புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாக்கும் கண் கண்ணாடிகள் அணிய வேண்டும். மேலும், புற ஊதாக்கதிர்கள் சுமார் 99 முதல் 100 சதவிகிதம் வரையிலான புற ஊதாக்கதிர்களைத் தடுக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும். சூரியனை நேரடியாகப் பார்க்க கூடாது. குழந்தைகளுக்கும் கூலிங் கிளாஸ் அணியச் செய்வது பாதுகாப்பானது. 


3. மானிட்டரில் இருந்து பாதுகாப்பான தொலைவை வைத்துக் கொள்வது


கணினி மானிட்டர்கள், ஸ்க்ரீன்க்ள் ஆகியவை நம் கண்களில் இருந்து ஒரு முழம் தொலைவிலும், கண் பார்வை அளவில் இருந்து சுமார் 20 டிகிரிகள் கீழ்ப்புறமாகவும் இருக்க வேண்டும். மேலும், கணினியில் பணி மேற்கொள்ளும் போது, அறையில் போதிய வெளிச்சம் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகளைப் பயன்படுத்துவது கண்களில் அழுத்தம் ஏற்படலாம். 



4. 20-20-20 விதி


கண்களை நீண்ட காலத்திற்குப் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றால் 20-20-20 விதியைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை, உங்கள் கணினி திரையில் இருந்து 20 அடி தொலைவில் இருக்கும் பொருள்களின் மீது பார்வையைக் குவிக்க வேண்டும். மேலும், கண்களின் ஈரப்பதம் குறைவதைத் தடுக்க, 20 முறை வேகமாக கண் சிமிட்ட வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து 20 அடிகள் நடக்க வேண்டும். 20-20-20 விதியைப் பின்பற்றுவதன் மூலம், கண்களுக்கு ஓய்வு தரப்படுவதோடு, முதுகுப் பிரச்னைகளையும் தவிர்க்கலாம். 


5. கண்களுக்கான மருத்துவப் பரிசோதனை!


கண் பார்வையைப் பாதுகாக்கவும், கண்களைச் சிறப்பாக வைத்துக் கொள்ளவும், கண் பரிசோதனையை அவ்வபோது மேற்கொள்ள வேண்டும். கண்ணில் கண்ணாடி அணிபவர்களாக இருந்தால், தங்கள் கண் பவர் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நோய்களில் இருந்து பாதுகாக்க அவ்வபோது மருத்துவப் பரிசோதனைகள் மிக முக்கியமாக பின்பற்றப்பட வேண்டும்.