உருவக்கேலி.. இது நம் சமூகத்தில் ஒரு கரையான். உருவத்தை வைத்து கேலி செய்வது தவறு என்பதை உணராமலும், உணர்ந்தாலும் அதனால் என்ன என்ற மெத்தனத்தால் நடைபெறும் ஒரு குற்றம்.


அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் வேதனை தெரியும். பொதுவாகவே ஒருவருக்கு நகைப்பை ஏற்படுத்த வேண்டுமென்றால் உருவத்தில் ஏதேனும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்று பொதுமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.. குண்டான உருவம் இல்லை குச்சியான உருவம். குட்டையான உருவம் இல்லை நெட்டையான உருவம் என்றால் சினிமா பொதுமைப்படுத்தி வைத்துள்ளது. அதுவே அப்படியே சமூகத்திலும் பிரதிபலிக்கிறது. உருவக்கேலியை எதிர்கொள்ள இந்த டிப்ஸை தருகிறோம். அனைவரும் அழகானவர்கள்தான்.


1. அர்த்தமற்ற விஷயங்களை காதில் போட்டுக்கொள்ளாதீர்கள்..
குட்டை, நெட்டை, குண்டு, ஒல்லி, கருப்பு, சுருள் முடி, கோரை முடி, தெத்துப் பல், அரிசிப் பல், மாறு கண், இப்படி எந்த வகையிலாவது யாரேனும் உங்களை விமர்சித்தால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் அதை சட்டை செய்யாமல் இருப்பது. சிலருக்கு நாம் ஒரு விமர்சனத்துக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பதே முக்கியம். ஒருவேளை நாம் அழுது உடைந்தால் அதை அவர்கள் சாதகமாக்கிக் கொள்வார்கள். உருவத்துக்கும் வளர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை. அப்படியிருக்க வெளித்தோற்றத்தால் மனதை உடையச் செய்யலாமா? கேலி பேசுபவர்களை அசட்டை செய்யுங்கள். அது உங்கள் குடும்பத்தினராக இருந்தாலும்கூட.


2. கேலி பேசும் வெளியாட்களை என்ன செய்யலாம்?


குடும்பத்தினரை அசட்டை செய்துவிடலாம். அதே வெளியில் படிக்கும், வேலை பார்க்கும் இடத்தில் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று சந்தேகம் எழலாம். அதுவும் மிகவும் சுலபமே. வெளியாட்கள் உருவக் கேலி செய்தால். அவர்களிடம் வெகு நிதானமாக. நன்றி. நீங்கள் சொல்வது சரியே. ஆனால் நான் எப்படி இருக்கிறேனோ அது எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள். உங்களால் காட்டமாக பதில் சொல்ல முடியுமென்றால், என்னைப் பற்றி தனிநபர் விமர்சனத்தை முன்வைக்க நீங்கள் யார் என்று கேளுங்கள். அப்படியும் அந்த நபர் திருந்தவில்லை என்றால் அந்த நபரை புறக்கணியுங்கள். ஆனால் பயந்து ஓடுவது போல் காட்டாமல். ஒரு பெருங்கூட்டத்தில் அவரை மட்டும் புறக்கணிப்பது போல் காட்டுங்கள்.




3. உருவக் கேலி செய்யும் உறவினர்கள்:


வீடுகளில்தான் பெரும்பாலும் உருவக் கேலி தொடங்குகிறது. அதை ஆரம்பத்திலேயே கில்லி எறியுங்கள். உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் உங்கள் அறிவுரை தேவையில்லை என்று கூறுங்கள். நிறைய பேருக்கு யாரேனும் தலையில் அடித்தார் போல் சொல்லும் வரை உரைப்பதில்லை.


4.இணையத்திலும் விரியும் தொல்லை:


இணையத்திலும் சில நேரம் தொல்லை விரியும். அது எடை குறைப்பு விளம்பரம் வாயிலாகவோ அல்லது ஃபேர்னஸ் க்ரீம் புரோமோஷன் வாயிலாகக் கூட நடக்கலாம். அதற்கும் நாங்கள் தரும் டிப்ஸ் ஜஸ்ட் இக்னோர் என்பதே. ஆனால் உண்மையிலேயே உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேண எடை குறைப்பு அவசியம் என்ற சூழலில் உங்கள் நலனுக்காக உடல் எடையைக் குறையுங்கள். 


உருவக் கேலிக்கு ஆண்களைவிட பெண்களே அதிகம் உள்ளாகிறார்கள். ஆகையால், பெண்ணே பெரும் சக்திதான், அதில் உருவத்துக்கு எந்த வேலையும் இல்லை என்று பதிலடி கொடுங்கள். உங்கள் உடல், உங்கள் உரிமை.