கடந்தாண்டு இந்தியாவையே உலுக்கிய விவகாரங்களில் மிகவும் முக்கியமானது பெகாசஸ். இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ. என்ற மென்பொருள் நிறுவனத்தின் பெகாசஸ் என்ற உளவுபார்க்கும் மென்பொருள் மூலமாக இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் என்று 300க்கும் மேற்பட்டோர்களை மத்திய அரசு உளவு பார்த்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உலகின் மிகவும் பிரபலமான அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பெகாசஸ் உளவு மென்பொருளை இந்திய அரசுதான் வாங்கியது என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், அவர்கள் வெளியிட்ட செய்தியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2017ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி.
பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் அந்த நாட்டு கடற்கரையில் நடந்து கொண்டே பேச்சுவார்த்தை நடத்தினர். மோடியின் வருகை சுமூகமாகவே நடந்தது. அந்த பயணத்தின்போது ஏவுகணை அமைப்பு, பெகாசஸ் உளவு மென்பொருள் ஆகியவை அடங்கிய 2 பில்லியன் மதிப்பிலான வர்த்தகத்திற்கு இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டன என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு பிறகுதான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். மேலும், ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூகக்கவுன்சிலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருந்தது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக இந்திய அரசோ அல்லது பெகாசஸ் மென்பொருளை இந்தியாவிற்கு விற்றதாக இஸ்ரேல் அரசோ ஒப்புக்கொள்ளவில்லை.
முன்னதாக, கடந்தாண்டு இந்த விவகாரஸ் விஸ்வரூபம் எடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு சென்றபோது, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என்றும், நாட்டின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பானது என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Today Headlines : உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு ஆலோசனை! ஹாக்கியில் வெண்கலம்.! முக்கியச் செய்திகள் சில!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்