பண்டிகை என்றாலே ஸ்வீட் எடு கொண்டாடு மொமன்ட் தான். அப்படியிருக்க சர்க்கரை நோயாளிகளின் பாடோ திண்டாட்டம் தான். கண் முன்னால் கலர் கலரா விதவிதமா ஸ்வீட் ஆனால் கைவைத்தால் குடும்பமே சூழ்ந்து கொள்ளும் என்ற பயம். அவர்களுக்காகவே சில டிப்ஸ்.


1. சர்க்கரை நோயா? பண்டிகை காலத்தில் இப்படி சாப்பிடுங்கள்?


பண்டிகை காலத்தில் நமக்கு நாமே ரொம்பவும் கட்டுப்பாடு போட்டுக் கொள்ள வேண்டாம். அதேவேளையில் நாம் சிறு முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவோம். என்ன மாதிரியான உணவை, எவ்வளவு கலோரி கொண்ட உணவு என்பதை தீர்மானித்து உண்ண வேண்டும். 


2. உங்கள் உணவை முன் கூட்டியே திட்டமிடுங்கள்..


உங்கள் உணவு என்னவென்பதை முன் கூட்டியே திட்டமிடுங்கள். பண்டிகை என்றால் வீட்டில் விதவிதமான மெனுக்கள் தயாராகி இருக்கும். ஆனால் அதில் எது லோ கேலரி என்பதைப் பட்டியலிடுங்கள். அதில் எது காலை, மதியம், இரவுக்கானது என்று நீங்களே ஒரு சார்ட் தயார் செய்யுங்கள். ஆசை எவ்வளவு முக்கியமோ அளவும் அவ்வளவு முக்கியமாக. அளவாக பண்டிகை கால ஸ்பெஷல் ஃபீஸ்டை மகிழ்ச்சியாக உட்கொள்ளலாம்.


3 மாற்றத்தை விரும்புங்கள்:


மைதாவும் சர்க்கரையும் முற்றிலும் விரோதி என்று சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டாம். எப்போதாவது டயட்டில் இருந்து மீறலாம். மைதாவின் கலோரியும், ஊட்டச்சத்து குறைபாடும் தான் அதை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தக் காரணம. அதனால் சர்க்கரைக்கு பதில் நாட்டு வெல்லம், பொறித்த வறுத்த ஸ்நாக்ஸுக்குப் பதில் லேசாக பொறிக்கப்பட்ட உணவுகள் என்று ஏதாவது பயன்படுத்திக் கொள்ளலாம். கடையில் தயாரிக்கப்பட்ட இனிப்பு என்றால் லேபிளில் அதிலிலுள்ள கார்போஹைட்ரேட், புரதம், இனிப்பு, எண்ணெய் பயன்பாடு பற்றி தெரிந்து கொண்டு வாங்குங்கள்.




4.நேரம் தவறி சாப்பிடாதீர்கள்..


பண்டிகை நாட்களில் விருந்தினர்கள், நண்பர்கள், பட்டாசு, பொழுதுபோக்கு என பிஸியாக இருக்க நேரும் என்றாலும் கூட சர்க்கரை நோயாளிகள் நேரம் தவறி உண்ணும் உணவு சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காது. அதனால் ஸ்பெஷல் உணவுடன் உங்களுடன் காய்கறி உணவையும் சேர்த்துக் கொண்டு நேரம் தவறாமல் உணவை உண்ணுங்கள்.


5.தண்ணீர் அருந்துங்கள்:


சர்க்கரை நோயாளிகள் தேவையான அளவு தண்ணீர் அருந்தி உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். டீ, காப்பி, சோடா, கூல் டிரிங்க்ஸ் போன்றவற்றை பண்டிகை காலத்திலும் கூட நிச்சயமாக தவிர்த்து விடுங்கள். எப்போதும் அருகில் தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் தண்ணீர் அருந்த வேண்டியதை நினைவுபடுத்தும்.


6.உடற்பயிற்சியை மறக்க வேண்டாம்:


வழக்கமான நாட்களில் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சியை பண்டிகை காலத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டாம். ஏனெனில், அது இன்சுலின் அளவை சீராக வைக்க உதவும். மேலும் நீங்கள் உணவில் சில கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யும்போது உடற்பயிற்சி மிகவும் அவசியம்.


7.மருந்து, மாத்திரைகளை தவிர்க்க வேண்டாம்:


பண்டிகை நாளில் மாத்திரைக்கு லீவு விட்டால் என்னவென்று யோசிக்காதீர்கள். தவறாமல் மருந்து, மாத்திரைகளை உண்ணுங்கள். இல்லாவிட்டால் ரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படுவது உறுதி. ரத்தசர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதனை செய்யவும்.