உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பயிற்சி போட்டிகளில் இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியாவையும் எளிதில் வென்றது. இதனால், சூப்பர் 12 ஆட்டத்திலும் இந்தியா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி பாகிஸ்தானிடமும், நியூசிலாந்திடமும் படுதோல்வி அடைந்து பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இந்திய அணி தோல்வியடைந்ததை காட்டிலும், இரண்டு போட்டிகளிலும் போராடாமல் தோற்றது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பல நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இந்திய அணியின் செயல்பாடு குறித்து பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளராகவும் செயல்பட்ட வாசிம் அக்ரம் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது,


“ இந்தியாவின் மூத்த வீரர்கள் அனைவரும் தேசிய அணிக்காக டி20 ஆட்டங்களில் கடைசியாக மார்ச் மாதம் ஆடினர். தற்போது நவம்பர் மாதம் ஆகிவிட்டது. இது எதைக்காட்டுகிறது என்றால், அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அவர்கள் அனைவரும் ஐ.பி.எல். போட்டிகளே போதும் என்று நினைக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.




உலகம் முழுவதும் நீங்கள் விரும்பும் அளவிற்கு லீக் கிரிக்கெட் போட்டிகளை ஆடுகிறீர்கள். லீக் (ஐ.பி.எல்., கரிபீயன்) போன்ற போட்டிகளில் ஆடும்போது எதிரணியில் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு சிறந்த பந்துவீச்சாளர்களை மட்டுமே கண்டறிய முடியும். ஆனால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நீங்கள் 5 சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள நேரிடும்.


இது ஒன்றும் சிறந்த ஆட்டம் இல்லை. இது ஒருதலைபட்சமாக நடந்த ஆட்டம். இந்தியா நிறைய தவறுகளை செய்துள்ளது. அவர்கள் எப்போது எல்லாம் டாஸ் இழக்கிறார்களோ, அப்போது எல்லாம் அவர்கள் மனதளவில் பின்னடைவைச் சந்திப்பதை நான் உணர்கிறேன். ஒரு வாழ்வா? சாவா? ஆட்டத்தில் ரோகித்சர்மாவை மூன்றாவது வீரராக களமிறக்கியது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா நான்கு சதங்களை டி20 போட்டிகளில் தொடக்க வீரராகதான் அடித்துள்ளார். அவர்கள் இஷான்கிஷானை மூன்றாவது வீரராக இறக்க வேண்டும். இந்திய அணி அச்சத்துடன் ஆடியதற்கு இதுவே தொடக்கம் என்று கருதுகிறேன்.”


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




உலககோப்பை சூப்பர் 12 பிரிவில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 6 அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவில் 5வது இடத்தில் -1.609 என்ற புள்ளிகளுடன் உள்ளது. ரோகித், கோலி, கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட், சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷான், பாண்ட்யா, ஜடேஜா என்ற நீண்ட பேட்டிங் வரிசையும், பும்ரா, புவனேஷ்குமார்,ஷமி, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் என்று பந்துவீச்சாளர்களை கொண்ட இந்தியா தொடர்ந்து மிகவும் மோசமான புள்ளி விவரங்களுடன் தோற்பது சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நியூசிலாந்துடன் இந்திய அணி தோற்றவுடன் பேன் ஐ.பி.எல். என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண