சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை எடுத்துக் கொள்ளும் உணவு பொருளாக ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் உள்ளது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பொருளாக ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் இருக்கிறது என்றே சொல்லலாம்.
குறிப்பாக இந்தியாவில், உடல் நலம் குன்றியவர்களை பார்க்க செல்லும் போது பழங்கள் உள்ளிட்டவை வாங்கி செல்லும் போது ஹார்லிக்ஸும் வாங்கிச் செல்வதை பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டிருப்பதை பார்த்திருப்போம்.
ஹெல்த் ட்ரிங்க்ஸ் வார்த்தை நீக்க உத்தரவு:
ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களை இந்துஸ்தான் யுனிவர்சல் லிமிட்டெட் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த உணவு பொருட்களில் இருந்து ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ற வார்த்தையை இந்துஸ்தான் நிறுவனம் நீக்கியுள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமானது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) அறிக்கை அனுப்பியது. இதையடுத்து, இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட உணவு பொருட்கள் தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியது. அதில், உணவு பொருட்களில் ஹெல்த் ட்ரிங்க்ஸ் ( ஆரோக்கியமான பானம் ) என்று குறிப்பிட்டுள்ள சில நிறுவனங்கள், அதை நீக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் சேர்ப்பு:
இதையடுத்து, ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட உணவு பொருட்களில் இருந்து ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ற வார்த்தை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்துஸ்தான் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கையில், ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்டவைகளிலிருந்து ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊட்டச்சத்து பானங்கள் (Functional Nutritional Drinks) என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன்பு போர்ன் விட்டா, ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ற வார்த்தையை நீக்கியது குறிப்பிடத்தக்கது. உணவுகள் குறித்தான தவறான வழிகாட்டுதல்கள் ஏற்படக்கூடும் என்பதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.