மாநிலம் முழுவதும் எல்கேஜி முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. கொளுத்தும் வெயிலில் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் எதையும் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த நிலையில், வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு தங்களின் பொழுதைப் போக்குவது சவாலான ஒன்றாக இருக்கும். மாணவர்களை ஸ்மார்ட் போன், கேட்ஜெட்டுகளில் இருந்து விலக்கி, வேறு பணிகளில் ஈடுபடுத்துவது பெற்றோர்களுக்கும் கடுமையான பணியாகவே இருக்கிறது. இந்த நிலையில் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவிடுவது எப்படி என்று பார்க்கலாம்.


சொந்த / உறவினர் ஊர்களுக்குச் செல்லலாம்


பெரு நகரங்களில் படிக்கும் மாணவர்கள் கோடை விடுமுறையில் சொந்த ஊர்களுக்குச் செல்லலாம். பாட்டி வீட்டிலும் அத்தை, மாமா வீட்டிலும் கோடை விடுமுறை நாட்களைச் செலவிடலாம். கிணற்றில் நீச்சல், கிராம நண்பர்களுடன் கிரிக்கெட், தோட்டத்து விவசாயப் பணிகளில் உதவி, கோயில் திருவிழா, தாச்சாங்கல், பல்லாங்குழி, தாயம் என நேரம் சிட்டாய்ப் பறக்கும்.




ஆனால் நகரத்திலேயே வசிக்கும் மாணவர்களும், வீட்டுக்கு வெளியில் இடமில்லாமல் அறைக்குள்ளேயே இருக்கும் மாணவர்களும் ஸ்மார்ட் போன் தாண்டி யோசிப்பது சவால்தான். இந்த நிலையில் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் எப்படிக் கழிக்கலாம் என்று பார்க்கலாம்.   


நீச்சல், நடன பயிற்சிகள்


கோடை விடுமுறைக்கென்றே சில தனியார் நிறுவனங்கள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. குறிப்பாக நீச்சல், நடனம் உள்ளிட்ட உடல் சார்ந்த பயிற்சி வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்கலாம்.


நீச்சல் பயிற்சி ஒருவருக்கு அடிப்படையாகத் தேவைப்படும் கலைகளில் ஒன்று. எனினும் நீச்சல் கற்பிக்கப்படும் குளங்களில் தரமான தண்ணீர், குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில் பயிற்சியாளர் உதவியுடன் மட்டுமே குழந்தைகள், நீச்சல் பயிலுவதையும் உறுதிசெய்ய வேண்டும். அதேபோல ஸ்கேட்டிங், ஷட்டில், பேட்மிண்டன், அத்லெட்டிக்ஸ் பயிற்சிகளிலும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.




உள் விளையாட்டரங்கத்தில் 


வெயிலில் வெளியே சென்று பயிற்சி எடுப்பது கடினமாக இருக்கிறது என்றால் உள் விளையாட்டுகளில் (Indoor Games) கவனம் செலுத்தலாம். மூளைக்கு வேலை அளிக்கும் அபாகஸ், செஸ், கேரம்போர்டு வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்கலாம்.


மொழி ஆளுமையை வளர்க்க ஃபொனிக்ஸ் உச்சரிப்புப் பயிற்சி, ஸ்போக்கன் இங்க்லிஷ், இந்தி உள்ளிட்டவகுப்புகளில் சேர்க்கலாம்.


கலை ஆர்வத்தை வளர்க்கலாம்


ஆர்வம் இருக்கும் குழந்தைகளை அதற்கு ஏற்றவாறு மேற்கத்திய நடனம், பரதநாட்டியம், ஓவியம், வீணை, கீபோர்டு ஆகிய வகுப்புகளில் சேர்க்கலாம்.


பெண் குழந்தைகளுக்கு சிலம்பம், கராத்தே, குங்ஃபூ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் ஏதேனும் ஒன்றைக் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும். இது அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அளிக்கும். 


படிப்பில் பின்தங்கிய பாடங்களுக்கு சிறப்புப் பயிற்சி எடுக்க வைக்கலாம். எனினும் குழந்தைகளின் விடுமுறை பாதிக்காத வகையில் இருப்பது முக்கியம்.




வெளியில் அழைத்துச் செல்லுங்கள்!


மேலே சொன்னவை தவிர்த்து, குழந்தைகளை காலை, மாலை நேரங்களில் கடற்கரைக்கு அழைத்துச் செல்லாம். பூங்காவுக்கு அழைத்துச் சென்று பறவைகள், செடிகளைக் காண்பிக்கலாம். அவை குறித்து எடுத்துக் கூறலாம். வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற வரலாற்றுத் தலங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.


உறவினர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று, உறவு முறை பற்றியும் உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் சொல்லிக் கொடுங்கள்.


டிஐஒய் தெரியுமா உங்களுக்கு?


வீட்டில் நீங்களே செய்யும் வகையில் DIY (Do It Yourself) வகை பொருட்களை வாங்கிக் கொடுத்து, எளிமையான, சின்னச்சின்ன கிராஃப்டுகளை உருவாக்கச் சொல்லலாம்.


ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டும் வகையிலான புத்தகங்கள், புதிர்களை அவிழ்க்கும் நூல்கள், ஓவியங்கள் வரையும் நோட்டுகள் ஆகியவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.  


வாசிக்கக் கற்றுக் கொடுங்கள்


இவை எல்லாவற்றையும் தாண்டி மிக முக்கியமாக, வாசிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். பெற்றோர் செல்போனையும் தொலைக்காட்சியையும் பார்த்தால், குழந்தைகளும் அதையேதான் செய்வார்கள். குழந்தைகள் முன்பு புத்தகங்களை எடுத்து வாசித்தால், அவர்களுக்கும் வாசிப்பில் ஆர்வம் ஊற்றெடுக்கும்.



குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வகையில், படக் கதைகள், காமிக்ஸ், நன்னெறிக் கதைகள், சிறு கதைகள், குறு நாவல்களை வாசிக்க வைக்கலாம்.


வீட்டு வேலைகளைக் கற்றுக்கொடுங்கள்


எல்லாவற்றுக்கும் மேலாக ஆண்/ பெண் பாலினம் தவிர்த்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆபத்தில்லாத/ எளிமையான வீட்டு வேலைகளைக் கற்றுக் கொடுக்கலாம். நாம் செய்யும்போது உடன் அமர்த்தி, கற்பிக்கலாம்.


வாண்டுகள் தங்களின் விடுமுறை நாட்களைக் குதூகலமாகக் கழிக்க வாழ்த்துகள்.