பல் கூச்சம் சிறுவர் முதல் முதியோர் வரை பலரையும் பாடாய்ப் படுத்தும் பிரச்சினை இதுதான். குட்டிக் குழந்தைகளுக்கு ஐஸ் க்ரீம் என்றால் அலாதி பிரியமாக இருக்கும். சில குழந்தைகளுக்கு சாக்கலேட். ஆனால் இனிப்பாகவோ, குளிர்ச்சியாகவோ, சூடாகவோ எப்படிச் சாப்பிட்டாலும் பல் கூச்சம் அவதிப்படுத்தும்.


பெரியவர்களுக்கு பொது இடங்களில் டீ குடிப்பதும், உணவருந்துவதும் பாடான பாடாய் ஆகிவிடும். இத்தகைய சூழலில், நம்மை அசவுகரியத்துக்கு உள்ளாக்கும் சென்சிடிவ் டூத் எனப்படும் பல் கூச்சத்தை வீட்டிலேயே எப்படி சமாளிப்பது என்பதைப் பார்ப்போம். அமெரிக்காவில் மட்டும் இந்தத் தொந்தரவு 40% மக்களுக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


உப்பு தண்ணீரில் கொப்பளிப்பு:


ஆங்கிலத்தில் gargle என்பார்களே. அதுதான் இந்த பற் கூச்சப் பிரச்சனைக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய மிக எளிய சிகிச்சை. தினமும் இரண்டு முறை வாயை உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பதால் வாயின் ஆரோக்கியம் மேம்படும். இது இயற்கையான மவுத்வாஷ். வாயில் ஏற்படும் அலர்ஜிக்களைக் கட்டுப்படுத்தும்.
நாம் தொண்டவலிக்கு செய்வது போல் அதே செய்முறை தான். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர். அரை தேக்கரண்டி உப்பு. இந்தக் கலவையை 30 விநாடிகளாவது வாயில் வைத்து கொப்பளித்து வருவது நல்ல பலன் தரும்.




தேனால் கொப்பளித்தல்:


கவுண்டமணி காமெடியில் இவர் வாயைக் கூட தேனாலும் பன்னீராலும் தாங்க கொப்பளிப்பார் என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து வாயை கொப்பளித்து வர பற்கூச்சம் நீங்கும். தேனில் ஆன்டி செப்டிக், ஆன்டி பாக்டீரியல் பண்பு இருக்கிறது. தேன் நல்ல வலி நிவாரணியும் கூட. தீக்காயங்களில், சிராய்ப்புகளில் மருந்தை தேனில் குழைத்துப் போடுவதை நாம் பார்த்திருப்போம்.




மஞ்சளும் உப்பும் கொண்டு பல் துலக்கலாம்:


மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புள்ள பொருள். இதை தூள் உப்புடன் சேர்த்து தொடர்ந்து பற்களை தேய்த்து, மசாஜ் பண்ணுவதுபோல் தேய்க்க வேண்டும். அவ்வாறு தேய்த்து வந்தால் பற்கூச்சம் நீங்கும். 1 டீ ஸ்பூன் மஞ்சள், அதில் 1/2 டீ ஸ்பூன் உப்பு மற்றும் 1/2 டீ ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் தயார் செய்ய வேண்டும். அவ்வப்போது செய்து கொள்ளலாம்.




க்ரீன் டீயிலும் கொப்பளிக்கலாம்:
உப்பு நீர், தேன் கலந்த நீர் மட்டுமல்ல க்ரீன் டீயிலும் வாயை கொப்பளிக்கலாம். இது ஓரல் ஹைஜீன் எனப்படும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். க்ரீன் டீயை மவுத் வாஷ் போல் ஒரு நாளைக்கு இருமுறை பயன்படுத்தலாம்.





வெனிலா எசன்ஸ்:


வெனிலா எசன்ஸை ஒரு பஞ்சில் நனைத்து அதை பற்கூச்சம் உள்ள இடத்தில் வைத்தால் சரியாகிவிடும். ஆனால் இவை எல்லாம் தற்காலிக மற்றும் ஆரம்ப நில பிரச்சினைகளுக்கான தீர்வே. இவற்றிற்கு உங்களின் பல் வலி சரியாகவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.



பொதுவாகவே நாம் பயன்படுத்து ப்ரஷில் கஞ்சத்தனம் பார்க்காமல் நல்ல ப்ரஷ் பயன்படுத்த வேண்டும். பற்களைக் கடிக்கக்கூடாது. அமிலத் தன்மை அதிகமுள்ள உணவை அளவாக சாப்பிட வேண்டும். இரு முறை பல் தேய்த்தல், வாயை சாப்பிடும் முன், சாப்பிட்ட பின்னர் கொப்பளித்தல் போன்ற பழக்கங்களால் வாய் ஆரோக்கியத்தைப் பேணலாம்.