பெங்களூருவில் இரண்டு  குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் பரவியுள்ளதாக  ஐசிஎம்ஆர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


எச்எம்பிவி வைரஸ் தொற்று:


உலகையே உலுக்கிய COVID-19 நோய்க்குப் பிறகு, சீனாவில் HMPV என்ற வைரஸ் பரவி வருகிறது. தற்போது, ​​இந்தியாவில் இந்த வைரஸின் முதல் வழக்கு பதிவாகியுள்ளது. பெங்களூரு மருத்துவமனையில் உள்ள எட்டு மாத குழந்தைக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாத குழந்தை ஒன்றுக்கும் இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இதையும் படிங்க: Madurai Power Shutdown: மதுரையில் (7.1.2025) நாளை மின் தடை - எங்கெல்லாம் தெரிஞ்சிக்க உள்ள போய் பாருங்க..!


பெங்களூருவில் உள்ள தனியார்  மருத்துவமனையில் 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாதிரியை தங்கள் ஆய்வகத்தில் பரிசோதிக்கவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. ‘


இந்த நிலையில் இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல். இந்த இரண்டு குழந்தைகளும் எந்த வித வெளிநாட்டு பயணங்களும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 


எச்எம்பிவி வைரஸ் என்றால் என்ன? 


மனித மெட்டாப்நியூமோ வைரஸ் என்பது நியூமோவிரிடே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த நெகட்டிவ் சைன்ஸ் ஆர்.என்.ஏ வைரஸ் என்பதாகும். கடந்த 2001ஆம் ஆண்டு நெதர்லாந்தில் முதல் முறையாக இந்த வைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் முதல் முதலில்  சுவாச தொற்றுள்ள குழந்தைகளிடம் இருந்து கண்டிபிடிக்கப்பட்டது. 


குழந்தைகளுக்கு நிறைய தொற்று நோய்கள் ஏற்படுவதையடுத்து நிமோனியாவாக இருக்கலாம் என எண்ணி நோய்கள் கட்டுப்பாட்டு ஆணையம் கண்காணிப்பு குழுவை உருவாக்கியது. அப்போதுதான் அது  மனித மெட்டாப்நியூமோ வைரஸால் உருவாகிறது என கண்டுபிடித்தனர்.


HMPV பொதுவாக குழந்தைகளில் கண்டறியப்படுவதாக கூறப்படுகிறது. அனைத்து காய்ச்சல் மாதிரிகளிலும், 0.7% HMPV என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸின வகை என்பது  இன்னும் கண்டறியப்படவில்லை.


நோய் அறிகுறிகள்: 


இதன் அறிகுறிகள் என்னவென்றால், இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை சொல்லப்படுகிறது. குழ்ந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அதிகம்  பரவும் அபாயம்  இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்துமா, சிஓபிடி எனப்படும் நுறையீரல் பாதிப்பு உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தும்மலில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாகவும் இந்த  வைரஸ் பரவுதாக கூறுகின்றனர். 


இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு முதல் 5 நாட்களில் அறிகுறிகள் தெரியும் என்றும் இந்த வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் அறிகுறிகளை கட்டுப்படுத்த மட்டுமே சிகிச்சை தரப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


இதையும் படிங்க: ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!


இந்த நோயை கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது, இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது போன்றவற்றை தவறாமல் செய்ய வேண்டும் என்பதை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.


உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ சுவாச தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தாலோ, சில நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தொடர்ந்தாலோ அல்லது மோசமடைந்தாலோ, காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தாலோ நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.