TN Assembly: 2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் சட்டமன்றத்திற்கு வந்திருந்தனர்.
யார் அந்த சார்?
சட்டமன்றத்திற்கு வந்திருந்த எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினர் அணிந்திருந்த சட்டையில் யார் அந்த சார்? என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் உள்ளேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியை ஞானசேகரன் சாரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியதாகவும், அப்போது ஞானசேகரனுக்கு வந்த அழைப்பில் ஞானசேகரன் சார்? சார்? என்று கூறியதாகவும் போலீசாரிடம் மாணவி விசாரணையில் கூறியதாக தகவல் வெளியாகியது.
சட்டையிலும் எதிர்ப்பு:
இந்த விவகாரத்தில் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஆளுங்கட்சியான தி.மு.க. தங்களுக்கு நெருக்கமான அந்த சாரை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் அ.தி.மு.க. தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த பரபரப்பான சூழலிலே, இன்று தொடங்கிய சட்டமன்ற கூட்டத்திற்கு யார் அந்த சார்? என்ற வாசகம் பொறித்த சட்டையுடன் அ.தி.மு.க.வினர் அவைக்கு வந்தனர். சட்டமன்றத்தில் யார் அந்த சார்? என்ற பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இன்று காலையில் அ.தி.மு.க.வினர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடத்த இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், தி.மு.க.விற்கு எதிராக தீவிரமாக செயல்பட அ.தி.மு.க. வியூகம் வகுத்துள்ளது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் வழக்கத்தை விட கடும் போட்டி எழும் சூழல் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது.
இபிஎஸ்-க்கு பெரும் சவால்?
ஆளுங்கட்சியான தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்துள்ள நிலையில், அ.தி.மு.க. தங்களுக்கு சரிந்துள்ள மக்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள அடுத்த ஒரு வருடம் தீவிரமாக போராட்டம், தி.மு.க. எதிர்ப்பை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்ற பிறகு அ.தி.மு.க. சந்தித்த எந்த தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி கிடைக்காத சூழலில், அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைக்கும் மிகப்பெரிய அழுத்தத்தை உண்டாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், கட்சியை வலுப்படுத்துதல், மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வின் செல்வாக்கை மீண்டும் உயர்த்துதல், தென் தமிழகத்தில் அ.தி.மு.க.வின் செல்வாக்கை மீண்டும் அதிகரித்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடவும் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஒரு வருடத்திற்கு இப்படித்தான்:
தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபமெடுத்துள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற விவகாரத்தில் தி.மு.க.விற்கு எதிரான விமர்சனத்தை வலுவாக மக்களிடம் கொண்டு செல்ல அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஒரு வருடத்திற்கு இதுபோன்று அடிக்கடி பல்வேறு நடவடிக்கைகளையும், வியூகங்களையும் கையில் எடுக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாகவே சட்டசபைக் கூட்டத்திற்கு யார் அந்த சார்? என்ற வாசகத்துடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்ததை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.