Life Support Conditions: சிகிச்சையின் போது உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை நீக்குவதற்கான, 4 புதிய நிபந்தனைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


மத்திய அரசு அதிரடி உத்தரவு:


மருத்துவத்துறையில் லைஃப் சப்போர்ட் என்பது, ஒருவருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முக்கிய உறுப்புகள் செயலிழந்த பிறகு, அவருக்கான சிகிச்சையை தொடங்குவதற்காக அவசரகாலத்தில் செய்யப்படும் சிகிச்சைகள் மற்றும் நுட்பங்களை உள்ளடக்கியது ஆகும். இந்நிலையில், செயலற்று கிடக்கும் ஒருவரை கருணைக்கொலை செய்வது தொடர்பான புதிய வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், சில நிபந்தனைகளை மனதில் கொண்டு ஒரு நோயாளியின் உயிர் ஆதரவை (லைஃப் சப்போர்ட்) அகற்றுவது குறித்து மருத்துவர்களால் முடிவு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. 


லைஃப் சப்போர்ட்டை அகற்ற 4 நிபந்தனைகள்:


மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்கள் நான்கு நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றன. அதனடிப்படையில்,நோய்வாய்ப்பட்ட நபரின் உயிர் ஆதரவை அகற்றலாமா வேண்டாமா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்யலாம். இதில் முதல் நிபந்தனை, நோயாளி மூளைச்சாவு அடைந்ததாக அறிவிப்பதாகும்.  நோயாளியின் நோய் உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது என்பதை விசாரணையில் வெளிப்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனையாகும்.  இந்த சூழ்நிலையில் சிகிச்சையின் பலன் இருக்காது. மூன்றாவது நிபந்தனையாக,  நோயாளி அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வாழ்க்கை ஆதரவைத் தொடர மறுப்பதற்கான அனுமதியை பெற வேண்டும். நான்காவது மற்றும் கடைசி நிபந்தனை என்னவென்றால், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி உயிர் ஆதரவை (லைஃப் சப்போர்ட்) அகற்றும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.


டெர்மினல் பாதிப்புகள்:


செயலற்ற கருணைக்கொலைக்கான புதிய வழிகாட்டுதல்களில் டெர்மினல் நோயும் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், டெர்மினல் நோய் என்பது குணப்படுத்த முடியாத ஒரு நிலை, இதில் எதிர்காலத்தில் மரணம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. டெர்மினல் நோயில் கடுமையான மூளைக் காயங்களும் அடங்கும். உயிர் காக்கும் சிகிச்சையால் எந்தப் பயனும் இல்லை, மரணம் நிச்சயம் என்ற சூழலில் உள்ள நபர்களுக்கான லைஃப் சப்போர்ட்டை அகற்ற அரசு அனுமதிக்கிறது.


மருத்துவர்கள் சங்கம் சொல்வது என்ன?


இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆர்.வி.அசோகன், இந்த வழிகாட்டுதல்கள் மருத்துவர்களை சட்டப்பூர்வ ஆய்வு வரம்பிற்குள் கொண்டு வரும் என்றும், இது அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர்கள் எப்போதும் நல்ல நோக்கத்துடன் இதுபோன்ற மருத்துவ முடிவுகளை எடுப்பார். இதைச் செய்வதற்கு முன், மருத்துவர் நோயாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிலைமையை முழுமையாக விளக்கி, ஒவ்வொரு அம்சத்தையும் பரிசோதித்த பின்னரே முடிவெடுப்பார்” என்றும் விளக்கமளித்துள்ளார்.