ஒரு காலத்தில் கிணறு அல்லது தெருக்குழாய்களில் தண்ணீர் குடித்ததெல்லாம் மாறிவிட்டது. இன்றைக்கு கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்றாகிவிட்டது. சுத்தமான குடிநீர் என்பதே அரிதாகிபோனது. மினரல் வாட்டர் குடிப்பது நல்லதா? குழாய் நீரை காய்ச்சி குடிப்பது நல்லதா? போன்ற பல பல கேள்விகள் நம்மிடம்  இருக்கும். அதுவும் கோடை தொடங்கிவிட்டாலே  பெரும்பாலான வீடுகளின் ஃபிரிட்ஜில் தண்ணீர் பாட்டில்கள் நிரம்பிவிடும். ஐஸ் வாட்டர் குடிக்கலாமா?  கோடையில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு பதில் இந்தக் கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


தண்ணீரில் இயற்கையாகவே சத்துக்கள் நிறைந்துள்ளன. மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்று சொல்கிறது தேரையர் பாடல். அதாவது நீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்பது அதன் அர்த்தம். உலக அளவில் 33% மட்டுமே சுத்தமான குடிநீராக இருக்கிறது. இன்றைக்கு குழாய்நீர் சுகாதாரமில்லாதது என்ற கருத்தும் நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மினரல் வாட்டர் என்று பாட்டில்களில், கேன்களில் கிடைக்கும் தண்ணீரைக்  குடிக்கப் பழகிவிட்டோம். இதில் ஊட்டச்சத்துகள் இருக்கிறதா? சுத்தப்படுத்தும் குடிநீரில் சத்துக்கள் ஏதேனும் இருக்கிறதா?  தினமும் எவ்வளவு குடிநீர் குடிக்க வேண்டும்?


இந்த கேள்விகளுக்கெல்லாம் மருத்துவ உலகம் கொடுக்கும் பதில், மனித உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை தண்ணீரால் ஆனது. இதனால் ஒருவருக்கு தேவைப்படும் நீரின் அளவு என்பது அவருடைய உடல், வாழும் இடம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை பொறுத்தது. ஒருவரின் உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரில் அளவை கணக்கிடலாம்.  தினமும் காலையில் எழுந்தவுடன், தண்ணீர் குடிப்பது உடல்நலனிற்கு நல்லது. இதை தொடர்ந்து பின்பற்றிவந்தால், உடலுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிக்கலாம். உணவு சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ளமல், அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.




ஆர்.ஓ. வாட்டர்:


ஆர்.ஓ. எனப்படும் Reverse Osmosis முறையில் நீரானது சுத்திகரிக்கப்படுகிறது. கேன் நிறுவனங்களிலும் தண்ணீரின் கடினத்தன்மை மட்டுமே மாற்றப்படுகிறது. அதில் எந்தவித சத்துக்களும் இருப்பதில்லை. கேன் தண்ணீர் தயாரிப்பில் சில நிறுவனங்கள் தரமற்ற முறையில் கேன்களை பயன்படுத்துவதால், கேன் திறந்ததும் அதை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்திவிடுவது நல்லது.  அதேபோல, ஆர். ஓ.  அல்லது கேன் வாட்டரை காய்ச்சிக் குடிப்பதால் எந்தவித சத்துக்களும் அதில் இருந்து வெளியேறாது என்று சொல்லப்படுகிறது.


மினரல் வாட்டர் என்பது என்ன?


நாம் காசு கொடுத்து வாங்கும் பாட்டில்களில் உள்ள தண்ணீர்தான் மினரல் வாட்டர், சத்துக்கள் நிறைந்தது என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மை  இல்லை.  ஆது சுத்திகரிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட குடிநீர்’ (packaged Drinking water) அவ்வளவே.  மினரல் வாட்டர் என்பது அதில் சரியான அளவில் கனிமங்கள் சேர்க்கப்படுவதால் கிடைப்பது. ஆனால் ஒரு பாட்டில் மினரல் வாட்டர் தயாரிப்பதற்கே அதிக செலவாகும். வெளிநாடுகளில், நதிகளில் இருந்து தண்ணீர் எடுக்கபட்டு, அதனுடன் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதுதான் உண்மையான மினரல் வாட்டர்.


ஐஸ் வாட்டர் நல்லதா?


சுட்டெரிக்கும் வெயிலுக்கு நாம் ஐஸ் வாட்டரைதான் தேடுவோம். ஆனால், ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஜீரணக் கோளாறு, உடல் உறுப்புகள் பாதிப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.  தொடர்ந்து குடித்து வந்தால், புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், இனி ஐஸ் வாட்டருக்கு பெரிய நோ சொல்லுங்க.


மிதமான சூட்டில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்:


தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள் என்கிறார்களே! ஆனால், பலரும் சுத்திகரிக்கப்பட்ட  கேன் அல்லது ஆர். ஓ. தண்ணீரை, லேசாகச் சூடு வந்ததுமே அடுப்பை அணைத்துவிடுகின்றனர். நீர் நன்கு கொதிநிலைக்கு வந்து, குமிழ்கள் வரும்போது, அந்தக் கொதிநிலையிலேயே 10 நிமிடங்கள்  இருக்கவேண்டும். இந்த நீரை ஆறவைத்து, வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


இளஞ்சூட்டில் தண்ணீர் குடிப்பது உடல்நலனிற்கு  ஆரோக்கியமானது என்கிறது சித்த மருத்துவம். தினமும் மிதனான சூட்டில் வெந்நீர் குடிப்பதை கோடையில் கடைப்பிடிப்பது சற்று சிரமம்தான் என்றாலும், பழகிக்கொள்ளலாம்தானே!