கோலிவுட், டோலிவுட் , மல்லுவுட் என தென்னிந்திய சினிமாவில் வில்லனாக அதகளப்படுத்தி வருபவர் நடிகர் மதுசூதன். இவர் மௌன குரு, கோலி சோடா, தனி ஒருவன், இரும்பு திரை , வேலைக்காரன், அரண்மனை 3, சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன்  என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மிரட்டும் வில்லனாக வந்தாலும் இயல்பாகவே படு ஜாலி டைப்பாக இருக்கிறார் மதுசூதன். இவர் முன்னாள் இராணுவ வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் கேப்டனாக இருந்திருக்கிறார். எப்படி தான் இராணுவத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தேன் என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் மதுசூதன் . 


அதில்" நான் வில்லனாகத்தான் நடிச்சிருக்கேன். ஆனால் எப்போதும் சிரிச்சுட்டேதான் இருப்பேன். என்னை தமிழ் சினிமாவுக்கு முதன் முதலா அறிமுகப்படுத்தியவர் விஜயோட அப்பாதான். செந்தூர பாண்டி படத்தின் மூலமாக அறிமுகமானேன். நான் திரைக்கு வருவதற்கு முன்னால் ஆர்மியில் கேப்டனாக இருந்தேன். இப்போ நான் எக்ஸ் கேப்டன். கேப்டன் பிரபாகரன் திரைப்படம் பார்த்துவிட்டு எனக்கு விஜயகாந்தை பார்க்க ஆர்வம் வந்தது. அந்த சமயத்தில் நான் ஆந்திராவில் இருந்தேன். அங்க தமிழ் வகுப்பு எடுக்க நிறைய ஆட்கள் வந்தாங்க. அப்போது அவங்க கூட எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவங்க என்கிட்ட சொன்னாங்க, பார்க்க அழகா இருக்கீங்க ..நீங்க ஏன் சினிமாவுல நடிக்க கூடாதுன்னு. எனக்கு மைக்ல கூட பேச வராது ...நான் எல்லா ஸ்டேட்டும் போயிருக்கேன். ஆனால் தமிழ்நாடு பார்த்ததே இல்லை. நான் உங்க கூட தமிழ்நாட்டுக்கு வற்றேன்னு சொன்னேன். முதன் முதலா தமிழ்நாட்டுல  மதுரை திருமங்கலம் போனோம். அங்க வால்டர் வெற்றிவேல் படம் பார்த்தோம். நான் முதன் முதலா பார்த்த தமிழ் சினிமா அதுதான் . அங்கிருந்து சென்னை வந்தோம். அங்க ஒருத்தர் எனக்கு அண்ணன்  மாதிரி , அவர் ராவத்தர் ஆஃபிஸ்ல வேலை பார்த்துட்டு இருந்தார். அப்போ அவர் மூலம் நான் விஜய்காந்தை சந்தித்து பேசினேன். 2 நிமிடங்கள் பேசினேன். அப்போ விஜயகாந்த் சார் கேட்டார் நடிக்கிறியானு கேட்க , அப்படித்தான் எனக்கு  சந்திரசேகர் சார் வாய்ப்பு கொடுத்தார். அப்புறம் அடுத்தடுத்த படங்கள்ல கமிட் ஆனேன். நான்கு வருடங்கள் நடித்த பிறகு சாரி பிஸினஸ் பண்ணேன். நல்ல வருமானம் , அதன் பிறகு தெலுங்கு சீரியல்ல நடிச்சேன். அதன் பிறகு 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ராவணன் படத்துல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. மீண்டும் சினிமா பயணம் தொடங்கியது“ என தெரிவித்துள்ளார் மதுசூதன்.