தமிழ்நாட்டு சமையல் என்றால் புளி இல்லாமலா? ருசிக்கு புளி என்றால் ருசியும் ஆரோக்கியமும் சேர்த்தே தரும் குடம்புளி எனக் கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் ஜி.கே.தாராஜெயஸ்ரீ BAMS.


குடம்புளி என்பது செடிகளில் விளையும் புளி. பார்ப்பதற்கு பூசணிக்காய் வடிவத்தில் சிறியதாக இருக்கும். இது பழமானதும் காயவைத்து அதன் சதை பகுதியை புளிக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர் கேரள மக்கள். இதன் சுவை மற்றும் வாசனைக்காகவே சமையலில் புளிக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர்.





உடல் எடை குறைப்புக்கு குடம்புளி:


கொழுத்தவனுக்கு கொள்ளு என்பார்கள். கொள்ளு எப்படி உடல் எடைக் குறைப்பில் உதவுகிறதோ அதே போல் குடம்புளியும் எடைக் குறைப்பில் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. 


உடல் எடை குறைய வேண்டும் என விரும்புபவர்கள் சிறு நெல்லி அளவு குடம்புளியை எடுத்து நீரில் ஊறவைக்க வேண்டும். அதில் மூன்று பங்கு நீர் எடுத்து கொதிக்கவிட்டு, பிறகு அதை குளிரவைத்து உணவுக்கு முன்பு அரை டம்ளர் வீதம் என மூன்று வேளையும் குடித்து வர எடை குறையும். ஆனால், ஆயுர்வேதமாகட்டும் இல்லை வேறு எந்த மருத்துவமும் ஆகட்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துகொள்ள வேண்டாம்.  


குடலுக்கு நன்மைகள் ஏராளம்:
பொதுவாக அல்சர் போன்ற குடல் புண் நோய் உள்ளவர்களை புளி சேர்க்க வேண்டாம் எனக் கூறுவார்கள். ஆனால் குடம்புளி எடுத்துக் கொண்டால் குடல் இயக்கம் சீராகிறது. அஜீரணக் கோளாறு அகன்று போகிறது. தினமும் அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் குடம்புளி சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் நோய்கள் கட்டுப்படும். அமிலத்தன்மை குறையும். கோடைக்காலங்களில் இயற்கை பானமாக இவை செயல்படும். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துகொள்ளும் இயற்கை பானங்களில் குடம் புளி பானமும் ஒன்று.


மலச்சிக்கலுக்கு மருந்து:


மலச்சிக்கல் சிலரைப் பாடாய்ப்படுத்தும். அவர்களுக்கு குடம்புளி அருமருந்து. இயற்கையான மலம் இளக்கிகளில் குடம்புளியும் ஒன்று. மலச்சிக்கல் கொண்டிருந்தால் வெதுவெதுப்பான நீரில் குடம்புளி கூழ் கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.


குடம்புளி சாறு குடித்தால் இத்தனை பலனா?


குடம்புளியை சாறாக்கி குடித்து வந்தால் நீரிழிவு நோய் வகைகளை கட்டுப்படுத்த செய்கிறது. மேலும் தீவிரமாகாமல் தடுக்கிறது. குடம்புளி சாறு குடிப்பது புற்றுநோயை எதிர்த்து போராட உதவும்.


நோய் எதிர்ப்பு சக்திக்கு குடம்புளி:
குடம்புளியில் இருக்கும் கார்சினோல் ஆனது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கர்ப்பகாலத்தில் தாய் மற்றும் குழந்தையின் ஊட்டச்சத்து அதிகரிக்க இவை பயன்படுத்தலாம். சருமப் பொலிவுக்கும் குடம்புளி உதவுகிறது. கேச பளபளப்பிற்கும் குடம்புளி உதவுகிறது. உதட்டு வெடிப்பு நீங்க குடம்புளி வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.