கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் பகுதியில் உள்ள சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் மொத்தம் உள்ள 9 வார்டு உறுப்பினர்களில் 7 வார்டு உறுப்பினர்கள் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர். பின்னர் அவர்கள் ஆட்சியரின் வருகைக்காக காத்திருந்த அவர்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது அவர்கள் கையில் சி.தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவரின் தொடர் ஊழலை கண்டித்து, உடன் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம் என எழுதப்பட்டு இருந்த சிறிய பேனரை கையில் பிடித்துக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் , பின்னர் அவர்கள் தங்களது ஊராட்சியில் நடக்காத வேலைகள், நடந்ததாக கணக்கு எழுதி நிதி கையாடல் நடந்து உள்ளது எனவும். 15-வது நிதிக்குழு மூலம் ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதில் அரசின் விதி மற்றும் வழிகாட்டுதல் மீறப்பட்டு உள்ளது.

 



 

தங்கள் கிராமத்தில் புதிதாக வீடு கட்ட வரைபட அனுமதி கேட்பவர்களிடம் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட பல மடங்கு பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது, மேலும் அதனையும் தாண்டி பணம் கொடுத்தவர்களுக்கும் ரசீதுகள் கொடுக்கப்படவில்லை. இது மட்டும் இல்லாமல் ஊராட்சியில் இருக்கும் வீடுகளின் அசல் எண்ணிக்கை மறைக்கப்பட்டு, பாதியாக காட்டி, வரி வசூலில் பெருமளவு முறைகேடு நடந்து உள்ளது. இதேபோல் ஊராட்சியில் பல்வேறு கையாடல் மற்றும் முறைகேடுகள் நடந்து வருகிறது. இது பற்றி ஊராட்சிகள் உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 



 

ஆகவே இந்த முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் செய்வோம். இதற்காக எங்களின் பதவியை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யும் நிலையில் உள்ளோம் என கூறினர். சிறிது நேரத்தில் இது பற்றி தகவல் அறிந்ததும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கணக்காளர் முரளிதரன், மாவட்ட பயிற்சி அலுவலர் கதிர்வேல் ஆகியோர் வந்து, போராட்டம் நடத்திய வார்டு உறுப்பினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

 



 

அப்போது நேரில் வந்து அதிகாரிகள் விசாரணை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது, ஆனாலும் அவர்கள் ஆட்சியரை சந்திக்காமல் செல்ல மாட்டோம் என அங்கேயே இருந்தனர், பின்னர் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.