வெயில்காலம் தொடங்குவதற்கு முன்பே ஆங்காங்கு அனல் காற்றும் சுட்டெரிக்கும் வெயிலும் வீசிவரும் நிலையில் வரவிருக்கும் வெப்பத்தின் மத்தியில் சுகாதார அமைச்சகம் தற்காப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.வெளியிட்டுள்ள அறிக்கையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பட்டியலிட்டு, குடிமக்கள் தங்களை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும், முடிந்தவரை வீட்டிற்குள் இருக்கவும் அரசு வலியுறுத்தியுள்ளது. வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், இலகுரக பருத்தி ஆடைகளை அணியவும் மக்களை வலியுறுத்தியுள்ளது. மேலும் பீக் ஹவர் எனப்படும் நடுப்பகல் நேரத்தில் சமைப்பதைத் தவிர்க்கவும், வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


அறிக்கையில், ”வெப்பமான மற்றும் கடுமையான கோடை காலத்தில் நம் உடலைப் போதுமான அளவு நீரேற்றத்துடன் வைத்திருப்பது ஒருவரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். பயணத்தின் போது தண்ணீர் எப்போதும் கையிருபில் வைத்திருக்கவும். அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். எலுமிச்சை நீர், மோர், லஸ்ஸி, பழச்சாறுகள் அல்லது ஓஆர்எஸ் (ஓரல் ரீஹைட்ரேஷன் சொல்யூஷன்) போன்ற உப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை உட்கொள்ள வேண்டும், தர்பூசணி, வெள்ளரி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற புதிய பழங்களையும் உட்கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.




உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது தவிர, முடிந்தவரை வீட்டிற்குள் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. "நிழலான இடங்களில் தங்கவும், ஜன்னலுக்குத் திரைச்சீலைகள் பயன்படுத்தவும், மின்விசிறிகள், குளிரூட்டிகள் மற்றும் ஏசி பயன்படுத்தவும், மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்கவும்" என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியே செல்லும்போது, "துணி, தொப்பி, குடை,அல்லது ஒரு துண்டு" ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் தலையை மறைக்க மறக்காதீர்கள். கூடுதலாக, வெளிர் நிற, தளர்வான பருத்தி ஆடைகளை அணியுங்கள்” என்றும் அறிவுறுத்தியுள்ளது.


முக்கியமாக அதிகரித்து வரும் வெப்பநிலையில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே பயணிப்பதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சகம் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. நிறுத்தப்படும் வாகனங்கள் வழக்கத்தை விட அதிக வெப்பமாக இருப்பதால், குழந்தைகளை அதில் ஏற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆல்கஹால், டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 


மேலும்


* வெளியில் வேலை செய்பவர்கள்
*இதய நோய் அல்லது உயர் இரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள்
*கர்ப்பிணிப் பெண்கள்
* 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள்
*இளம்பிள்ளைகள்
*கைக்குழந்தைகள்


ஆகியோர் வெப்பநிலையால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் வெப்பத்தை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
நாட்டில் சில இடங்களில் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலும் வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்த தினசரி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.