திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, கலசபாக்கம்,போளூர் ஆகிய இடங்களில் இருந்த 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தவர்கள் என்று காவல்துறையினருக்கு  தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர் அரியானா மாநிலத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கொள்ளை கும்பல் தலைவன் அரியானா மாநிலம் சோனாரி கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப் வயது (35) மற்றும் அரியானா மாநிலம் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆஜாத் வயது (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Continues below advertisement

 

Continues below advertisement

இவர்களை காவல்துறையினர் கடந்த 18-ந் தேதி திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் எண் 1-ல் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த 22-ந் தேதி திருவண்ணாமலை  நீதிமன்றம் எண் 1-ல் திருவண்ணாமலை நகர போலீசார் சார்பில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் முகமரி ஆரிப், ஆஜாத் ஆகிய இருவரையும் ஆஜர்படுத்தி 7 நாட்கள் போலீசார் காவலில் எடுத்தனர். போலீசார் காவல் விசாரணை முடிந்த பின்னர் அவர்கள் இருவரையும் மீண்டும் இன்று திருவண்ணாமலை நீதிமன்றம்  நீதிபதி கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க  உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர். மேலும் அவர்கள் இருவரையும் போளூர் வழக்கு தொடர்பாக மீண்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த மனுத்தாக்கல் செய்தனர். ஏ.டி.எம். கொள்ளையர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது; 

திருவண்ணாமலை  போலீசார் 7 நாட்கள் நடத்திய விசாரணையில், முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. காவல்துறையினர் எழுப்பிய கேள்விகளுக்கு, நாங்கள் இல்லை, தெரியாது என்ற பதிலை மட்டுமே நான் அவன் இல்லை பட பாணியில் பதில்  கூறியதால் காவல்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஏற்கெனவே கிடைத்த தகவலின்பேரில் ‘நிஜாம்’ என்ற நபரின் பெயரை குறிப்பிடும்போது, அவர்களது செயலில் மாற்றம் இருந்துள்ளன. இதையடுத்து, நிஜாம் குறித்த அவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், நிஜாம் இருப்பிடம் குறித்து தங்களுக்கு தெரியாது என தொடர்ந்து கூறியுள்ளனர். 

 

இது குறித்து திருவண்ணாமலை தனிப்படையினர் கூறும்போது, “ஏடிஎம் கொள்ளைக்கு மூளையாக நிஜாம் என்பவர் செயல்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது வழிகாட்டுதலின் பேரில், கொள்ளை நடைபெற்றுள்ளது. கொள்ளையடித்த பணத்தையும், அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. கோலாரில் தங்கியிருந்த நிஜாம், தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க, ஒரு தனிப்படையினர் கோலார் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையில், ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட ஹரியாணா கொள்ளையர்களை பிடிக்க, அம்மாநிலத்துக்கு மற்றொரு தனிப்படையினர் சென்றுள்ளனர். கண்டெய்னர் லாரி மூலமாக ஹரியாணா மாநிலத்துக்கு கொள்ளையடிக்கப்பட்ட பணம் கொண்டு சென்றுள்ளனர். முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்த நிலையில, மீதமுள்ள ரூ.70 லட்சத்தை மீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றனர்.