கங்குவா
சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. திரைக்கதையில் தெளிவின்மை , சூர்யாவின் நடிப்பு , பின்னணி இசை என படத்தில் பல அம்சங்களை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஒருபக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும் இன்னொரு பக்கம் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது கங்குவா திரைப்படம். நடிகை ஜோதிகா கங்குவா படத்தை பாராட்டி சில நாட்கள் முன்பாக பதிவிட்டிருந்தார். முதல் அரைமணி நேரம் சொதப்பல் தான் மேலும் படத்தில் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததாக ஜோதிகா தெரிவித்தார். எத்தனையோ பெரிய பட்ஜெட் படங்களில் இரட்டை அர்த்த வசனங்களும் மிகைப்படுத்தப்பட்ட சண்டைக்காட்சிகள் இருந்தபோது அந்த படத்தை பாராட்டும் விமர்சகர்கள் ஏன் கங்குவா படத்தின் பாசிட்டிவ்களை பற்றி பேசவேயில்லை என ஜோதிகா கேள்வி எழுப்பியிருந்தார். ஜோதிகாவின் பதிவைத் தொடர்ந்து கங்குவா படம் பிடிக்காத ரசிகர்கள் அவரையும் சேர்த்து விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள். தற்போது சூர்யா நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்காததற்கு ஜோதிகா தான் காரணம் என ஜோதிகா மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்கள் சிலர்.
சூர்யா சரிவுக்கு ஜோதிகா காரணமா ?
நடிகை ஜோதிகா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சூர்யா கதைகளை தேர்வு செய்யும் விதம் பற்றி பேசியிருந்தார். இந்த வீடியோவில் அவர் " நான் நடிக்கும் படங்களின் கதையை நான் தான் தேர்வு செய்வேன். அதேபோல் சூர்யா நடிக்கும் படங்களின் கதைகளை நாங்கள் இருவரும் சேர்ந்து தேர்வு செய்வோம்" என ஜோதிகா தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சூர்யா நல்ல கதைகளை தேர்வு செய்யாததற்கு ஜோதிகாவின் தலையீடே காரணம் என நெட்டிசன்ஸ் தெரிவித்து வருகிறார்கள்.
கங்குவா பாக்ஸ் ஆபிஸ்
கங்குவா திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ 127.64 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகார்ப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. கங்குவா திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 350 கோடி. கங்குவா திரைப்படம் உலகளவில் 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் இதுவரை 200 கோடி இலக்கைக் கூட எட்டாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது