முதலமைச்சரின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பின்படி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளை தெரிவு செய்து அந்த மாணவ, மாணவிகளுக்கு "இளம் கவிஞர் விருது" மற்றும் பரிசுகள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மாவட்ட அளவில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி அதில் சிறந்த 3 மாணவர்கள் மற்றும் 3 மாணவியர்களை தெரிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


 நவம்பர் 22ஆம் தேதிக்குள் அனுப்ப உத்தரவு

எனவே, மேற்படி ஒன்றிய அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வருவாய் மாவட்ட அளவில், 22.11.2024 வெள்ளிக்கிழமை அன்று கவிதைப் போட்டியினை நடத்தி, அதில் சிறந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவியை தெரிவு செய்து அம்மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், பயிலும் பள்ளி, மாவட்டத்தின் பெயர் மற்றும் தொலைபேசி எண். ஆகியவற்றினை 22.11.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் msectndse@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வருவாய் மாவட்ட அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு மாநில அளவிலான கவிதைப் போட்டி எதிர்வரும் 29.11.2024 அன்று சென்னை-8 எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.


 மாநில அளவிலான போட்டி எப்போது?


எனவே, மேற்படி மாநில அளவிலான கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ/மாணவியர்களை 29.11.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை மணியளவில் சென்னை- 8, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு உரிய பாதுகாவலருடன் வருகை தரும் வகையில் தகுந்த ஏற்பாடுகள் மற்றும் அறிவுரைகளை வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மேற்படி 29.11.2024 அன்று காலை 9.00 மணியளவில் சென்னை-8, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் "இளம் கவிஞர் விருது" கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான இடவசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரவும் மற்றும் மாநில அளவிலான கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் படைப்புகளில் இருந்து மாநில அளவில் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை நடுவர்கள் மூலம் தெரிவு செய்து அவர்களின் விவரத்தினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

மாநில அளவிலான கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் படைப்புகளில் இருந்து மாநில அளவில் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டு "இளம் கவிஞர் விருது" வழங்கி சிறப்பிக்கப்படுவர் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

கவிதை தலைப்பு

1.ஆணும் பெண்ணும் நிகர் என்று கூறிய பாரதியின் தொலைநோக்கு பார்வை.

2.தமிழன் என்று சொல்லடா என்ற பாரதியாரின் கூற்றிலிருந்து மாணவரின் பங்கு.


3.சட்டத்தின் பார்வையில் பெண்களின் பங்கு மற்றும் பாதுகாப்பு.


மேற்கண்ட ஏதேனும் தலைப்பினை தெரிவு செய்து அளித்தல் சார்ந்தும் இக்கவிதைப் போட்டி குறைந்தது 40 வரிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.


மொத்த மதிப்பெண்கள் -20


இவற்றில் மொழிநடை -10 மதிப்பெண்


இலக்கண நயம் -5 மதிப்பெண்


கவிதைக்கான விளக்கம் அளித்தல்- 5 மதிப்பெண்கள்


 என ஒதுக்கீடு செய்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.