சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நோயாக இருக்கிறது. மேலும், பலரின் உணவுப் பழக்கம், மன அழுத்தம் முதலானவற்றின் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 40 வயதுக்கு மேற்பட்டோரிடம் அதிகம் காணப்பட்ட நீரிழிவு நோய் தற்போது அனைத்து வயதினரிடையிலும் பரவும் அபாயம் பெருகியுள்ளது. 


இந்தியாவில் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 77 மில்லியனாகவும், உலகளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. உடலில் இன்சுலின் சுரப்பி தேவையான அளவு சுரக்கவில்லை என்றாலோ, சுரந்த இன்சுலின் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ, நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது இரண்டு வகைகளாக உள்ளது. முதல் வகையில், உடலின் இன்சுலின் சுரக்காமல் இருப்பது ஏற்படுகிறது. இரண்டாம் வகையில், சுரக்கப்பட்ட இன்சுலின் உடலுக்குப் பயன்படாமல் இருப்பது ஏற்படுகிறது. 


நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது சற்றே கடினம் என்ற போது, அதனைக் கட்டுப்படுத்தாமல் விடுவது இதய நோய், சிறுநீரக நோய்கள் முதலானவற்றை ஏற்படுத்தும் மேலும், நீரிழிவு நோய் தொடர்பான பொய்கள் உலகம் முழுவதும் பரப்பப்படுவதால் அவற்றை எதிர்கொள்வது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.


அதுவும் நீரிழிவு நோயாளி எதைச் சாப்பிட வேண்டும் என்பதில் தான் எத்தனை குழப்பம்.. அதைப் போக்கவே இந்தப் பட்டியல். இந்த உணவுகள் உங்களின் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள நிச்சயமாக உதவும்.




• முழு தானியங்கள்:  முழு தானியங்கள் வைட்டமின், தாதுக்கள் சத்து நிறைந்தவை. இவற்றில் நார்ச்சத்தும் அதிகம். மேலும் அவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் கடினமானவை. அதனால், செரிமானம் ஆக நிறைய நேரமாகும். இதன் காரணமாக சர்க்கரை அளவு மெல்ல உயரும். கருங் கோதுமை, பார்லி, ஓட்ஸ், குவினோ, கேழ்விரகு ஆகியன இந்த தன்மை உடைய முழு தானியங்கள் ஆகும்.
 
கீரை வகைகள்: கீரை வகைகளிலும் வைட்டமின்கள் அதிகமாக இருக்கின்றன. நார்ச்சத்தும் அதிகம். லெட்டூஸ், தண்டங்கீரை, பாலக் கீரை ஆகியனவற்றில் கார்போஹைட்ரேட்ஸ் அளவும் கலோரிக்களின் அளவும் மிகக் குறைவு. அதனால் இவற்றை சேலடாக, சூப் வகைகளாக சமைத்து சாப்பிடுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நிறைய கிடைக்கும்.


உலர் கொட்டைகள்:  உலர் கொட்டைகளில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. அதுவும் பாதாம், வால்நட் பருப்புகளில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி அமிலம் உள்ளது. வறுத்த ஃபாக்ஸ் நட் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல ஸ்நாக் ஆப்ஷன் என்று கூறலாம்.
 
மீன், கோழி, முட்டை: மீனில் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் உள்ளது. தேவையான எண்ணெய் சத்தும் உள்ளது. கோழி, மீன், முட்டை ஆகியன சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான புரதச் சத்தை தருகிறது. இவற்றை பேக் செய்தோ அல்லது கிரில் செய்தோ சாப்பிடுவதால் கூடுதல் கலோரிக்களை தவிர்க்கலாம். புரதம் சீராக உடலில் சேர்ந்தால் நீரிழிவால் ஏற்படும் பசித் தன்மை குறையும்.
 
யோக்ஹர்ட் மற்றும் காட்டேஜ் சீஸ்: யோக்ஹர்ட் மற்றும் காட்டேஜ் சீஸில் செறிவான புரதம், கால்சியம், வைட்டமின் டி உள்ளது. புதினா மோர், லோ ஃபேட் யோக்ஹர்ட் ஆகியன நல்ல ஸ்நாக்ஸாக அமையலாம்.


பழங்கள்: பழங்களில் பெர்ரி வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.  அவற்றில் வைட்டமினும், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகளும்  அதிகமாக உள்ளன. ஆப்பிள், பெர்ரி, பேரிக்காய் ஆகியன உகந்தவை. சாலட், ஸ்மூத்தி, ஃப்ரூட் கர்ட் என எப்படி வேண்டுமானாலும் இவற்றை சாப்பிடலாம்.