டெல்டா வைரஸ் ஆட்டத்தால் உலகமே ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியாசிஸ் பேசியதிலிருந்து..கொரோனா தாக்கம் தொடங்கியதிலிருந்து உலகம் இப்போது மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் இருக்கிறது. காரணம், உருமாறிய டெல்டா வைரஸ்.
இதுவரை உலகம் முழுவதும் 98 நாடுகளில் டெல்டா திரிபு வைரஸ் பரவியுள்ளது. தடுப்பூசி குறைவாக செலுத்தும் நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து மருத்துவமனைகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மற்ற திரிபுகளைவிட டெல்டா திரிபு 55% அதிக பரவும் தன்மை கொண்டது. டெல்டா வைரஸ்கள் மேலும், மேலும் உருமாறிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் சில காலத்தில் டெல்டா வைரஸ் தான் சவால்மிகு கோர ஆதிக்கம் செலுத்தும் வைரஸாக இருக்கப்போகிறது.
இந்நிலையில், உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய சூழலில் அனைத்து நாடுகளுமே பொது சுகாதாரத்தைப் பேணும் நடவடிக்கைகளில் முனைப்பு காட்ட வேண்டும். பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை என சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு பரவல் தொடர்பான தீவிர கண்காணிப்பை எந்தத் தருணத்திலும் கைவிடவே கூடாது. கொரோனா பரிசோதனைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். கொரோனா நோயாளிகளைக் கண்டறிந்து, தொற்று பரவல் தொடர்புகளைக் கண்டறிதல், தொற்றாளர்களைத் தனிமைப்படுத்தும் பணி ஆகியனவற்றை எந்தவித சமரசமும் இன்றி மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சமரசமின்றி பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கூட்டமான பகுதிகளை தவிர்த்தல் போன்றவற்றை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இதை சுய சுகாதார ஒழுக்கமாகப் பின்பற்ற வேண்டும். அவசியமற்று வெளியில் செல்லாம் வீடுகளிலேயே இருந்தாலும் கூட வீடும் காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
கொரொனா பரவலால் பல நாடுகளும் கடுமையான பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தச் சூழலில் வளர்ந்த நாடுகள் பின்தங்கிய நாடுகளுக்கு உதவ வேண்டும். உலக நாடுகள் தங்களுக்குள் மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்ட உபகரணங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு ஜூலைக்குள் சர்வதேச மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 70% பேருக்காவது தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
தடுப்பூசி வேகத்தை அதிகரிப்பது மட்டுமே உலக மக்களின் உயிரைக் காப்பாற்ற, கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த சிறந்த வழி. அந்த இலக்கை எட்ட வரும் செப்டம்பர் மாதத்துக்குள் உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் மக்கள் தொகையில் 10% பேருக்காவது தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இப்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் அனைத்து வகையான உருமாறிய கரோனா வைரஸ்களையும் திறம்பட எதிர்கொள்கின்றன என்பது நமக்கு நல்ல செய்தி. ஆதலால், தடுப்பூசி செலுத்திக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.