உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் எப்படியெல்லாம் போக்கு காட்டப்போகிறதோ என உலகமே அஞ்சிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் இப்படித்தான், இதுதான் அதன் பரவுன் தன்மை, இதுதான் அது ஏற்படுத்தும் அறிகுறிகள், இவ்வளவு தூரம் உயிர்ப்பலிக்கு வாய்ப்பிருக்கிறது என்றெல்லாம் உறுதிபடக் கூற இன்னும் ஒன்றிரண்டு வாரங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஒமிக்ரானில் நிலை என்னவென்பதை தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் ஒமிக்ரான் நிலை என்ன?
இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 23 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், மகாராஷ்டிராவின் புனே, மும்பை நகரங்கள், கர்நாடகா, என பல நகரங்களில் ஒமிக்ரான் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருந்தாலும் கூட ஒமிக்ரானால் உயிரிழப்பு நேர்ந்ததாக இதுவரை பதிவாகவில்லை. இன்று இந்தியாவின் கொரோனா பாதிப்பு 6,822 என்றளவில் உள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 3277 தொற்றுகளும், தமிழகத்தில் 719ம், மகாராஷ்டிராவில் 518ம், மேற்குவங்கத்தில் 465ம், மிசோரத்தில் 330ம் பதிவாகியுள்ளது.
மாநில அரசுகளின் நடவடிக்கை என்ன?
உத்தரப் பிரதேச அரசு ஒமிக்ரானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. உபிக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் RT-PCR பரிசோதனையும் மரபணு பரிசோதனையும் செய்யப்படுகிறது. புதிய உருமாறிய வைரஸை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை மருத்துவமனைகளில் செய்துவைக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 11 ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து கடந்த வாரத்தில் வந்த 5249 பேரில் 6 பேருக்கு கொரோனா உறுதியானது. ஆனால், 6 பேருக்குமே டெல்டா பிளஸ் திரிபு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைப் பொறுத்தவரையில் ஒமிக்ரான் பாதிப்பை அரசு கூர்ந்து கவனித்து வருவதாக சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இப்போதைக்கு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். டெல்லியில் கொரோனா இரண்டாவது அலையின் போது மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. அதனால் மாநில அரசு கொரோனா பதிவுகளை கூர்ந்து கவனித்து வருகிறது. கொரோனா பரிசோதனை, தொடர்பு கண்டறிதல், தனிமைப்படுத்துதலில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.
ஓமிக்ரான் பற்றிய லேட்டஸ்ட் அறிவியல் உண்மை என்ன?
ஓமிக்ரானால் தீவிர உடல் நலன் பாதிப்பு ஏற்படுமா? ஏற்கெனவே கொரோனா வந்தவர்களுக்கு மீண்டும் ஓமிக்ரான் பாதிப்பை ஏற்படுத்துமா? தடுப்பூசிகளை எதிர்க்குமா என்றெல்லாம் இன்னும் உறுதியாகவில்லை. ஒமிக்ரான் முதன்முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் பரவும் தன்மை அதிகரித்துள்ளது. மேலும், இப்போதைக்கு ஓமிக்ரான் வயதானவர்களைவிட இளைஞர்களையே, அதுவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையே அதிகம் பாதிக்கிறது. ஓமிக்ரானால் தென் ஆப்பிரிக்காவில் அடுத்த அலை ஏற்படுகிறதா என்பதையும் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஓமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்பாடு எப்படி?
ஓமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்பாடு எப்படி என்பதை இன்னும் உலக சுகாதார அமைப்பு இன்னும் இறுதி செய்யவில்லை. உலக நாடுகள் ஓமிக்ரான் தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டுள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.