தமிழகத்தில் கரோனா தடுப்பூசி புள்ளிவிவரத்தில் ஊசி போடாதவர்களுக்கும் போட்டதாக போலி தகவல் இடம்பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்கு நடைமுறை சாத்தியக்கூறுகளுக்கு அப்பாற்பட்ட இலக்குகளை சுகாதாரத் துறை நிர்ணயிப்பதாலேயே இந்த மாதிரியாக போலி தகவல்களை பதிவு செய்ய பணியாளர்களை நிர்பந்தித்துள்ளதாககக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாநிலம் முழுவதுமே, சுகாதாரப் பணியாளர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கரோனா தடுப்பூசி புள்ளிவிவரத்தில் பல்வேறு நிலையிலும் தவறு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சுகாதாரத் துறையின் நம்பத்தகுந்த வட்டாரங்களின் கூற்றின்படி கோவின் தளத்தில், தனிநபர்களின் வெவ்வேறு அடையாள அட்டைகளின் விவரம், சந்தையில் தயார் நிலையில் கிடைக்கும் மொபைல் எண் டேட்டா லிஸ்ட் ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. நிறைய எண்கள் தற்போது புழக்கத்திலேயே இல்லையாம். இறந்தவர்களின் மொபைல் எண் கூட பயன்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் தவறான தகவல் சேர்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. உதாரணத்துக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு மூத்த குடிமகனின் மொபைல் எண்ணிக்கு இரண்டு குறுந்தகவல் வந்துள்ளன. அவர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல் வந்தபோது அவர் உயிருடனேயே இல்லை.
அதேபோல், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அரசு ஊழியர் ஒருவருக்கு வந்த குறுந்தகவல்களில் மூன்று பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. தனது தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி யார் என்று தெரியாத மூன்று நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக வந்த தகவல் அவரை ஆச்சர்யப்பட வைத்தது. அதேபோல் இதுவரை ஒரு டோஸ் கூட செலுத்தாத ஒரு நபர் தடுப்பூசிக்கு வந்தபோது, அவர் ஏற்கெனவே முதல் டோஸ் போட்டுவிட்டதாக கோவின் தளத்தில் காட்டியுள்ளது.
இது தொடர்பாக மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் இவை அனைத்தும் போலி பதிவுகள் என்று கூறினர்.
”போலி பதிவுகள் உண்மையிலேயே மிகப்பெரிய பிரச்சனை. எளிதில் எட்ட முடியாத தடுப்பூசி இலக்கை எட்டுமாறு மேலிடத்தில் இருந்து அழுத்தம் தருகின்றனர். அதுவே இத்தகைய பரிதாப நிலைக்கு சுகாதாரத் துறை ஊழியர்களைத் தள்ளியுள்ளது. உதாரணத்து ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அன்றாட இலக்காக 250 தடுப்பூசிகள் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், அவர்களால் ஒரு நாளில் 70 முதல் 80 பேரை தடுப்பூசி செலுத்தவைப்பதே மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. அதனால், பிறரிடம் இருந்து அடையாள அட்டைகளைப் பெற்று போலி பதிவுகளைப் பதிவிடுகின்றனர். இதனைத் தவிர்க்க தடுப்பூசி இலக்குகளை அறிவியல் பார்வையில் நிர்ணயிக்க வேண்டும்” என்று பெயர் கூற விரும்பாத மருத்துவத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அதேபோல் இன்னொருவர் கூறும்போது, தடுப்பூசிக்கு இலக்கு நிர்ணயிக்காமல். தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்க வேண்டும். அப்படிச் செய்தால் போலிப் பதிவுகள் தவிர்க்கப்படலாம் என்றார்.
மேலும் தனது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே நிறைய பேர் தங்களின் மொபைல் எண்ணுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல் வந்ததாகக் கூறினார். இரண்டாவது டோஸைப் போட வராதவர்களுக்குப் பதிலாக போலி பதிவுகள் செய்யப்படுகின்றன.
அதேபோல் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினால் சுகாதாரப் பணியாளர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது. சில வீடுகளில் அவமானங்களை சந்திக்க நேர்வதாகக் கூறுகின்றனர்.
இந்நிலையில் தடுப்பூசி புள்ளிவிவரத்தில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடி குறித்து, பொது சுகாதாரம், தடுப்பு மருந்துகள் இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகத்திடம் கேட்டபோது, இந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இது மருத்துவத் தொழில் தர்மத்துக்கு எதிரானது. தண்டனைக்குரியது. களப் பணியாளர்கள், அவுட் சோர்ஸ் பணியாளர்கள் இத்தகைய வேலைகளில் ஈடுபடக் கூடாது என மருத்துவத் துறை எச்சரித்துள்ளது. அவ்வாறு செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
கரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசி. இப்போது கரோனா உருமாறிக் கொண்டே இருக்கும் சூழலில் தடுப்பூசி செலுத்துவது என்பது மட்டுமே தற்காப்புக்கான வழி. இதனை மக்களும் உணர்ந்து செயல்பட வேண்டும், அரசும் போலி பதிவுகளைத் தடுக்க இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.