கொரோனா நோயில் இருந்து மீண்ட பிறகு, நிரந்தரமாக சில குழந்தைகளின் சுவை மற்றும் வாசனையில் பிரச்சனை ஏற்படுவதால் 'தேர்ந்தெடுத்து மிகச்சில உண்பவர்களாக' மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் (UEA) நிபுணர்கள் கூறுகின்றனர்.
‘பரோஸ்மியா’ என்று அழைக்கப்படும், கோவிட்-19 இலிருந்து மீண்ட பெரியவர்களிடம் பொதுவாகக் காணப்படும் இந்தக் கோளாறு, குழந்தைகளுக்கும் வருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதனை பற்றி பெற்றோர்கள் அறிந்துகொள்ளவும், அந்த பிரச்னையில் இருந்து குழந்தைகளை விடுக்கவும் UEA மற்றும் அறக்கட்டளை ஃபிப்த் சென்ஸ் இணைந்து ஒரு வழிகாட்டியை உருவாக்கியுள்ளன.
இந்த கோளாறு குழந்தைகள் சாப்பிடும் உணவில் இருந்து அழுகிய இறைச்சி அல்லது இரசாயனங்கள் போன்ற விரும்பத்தகாத வாசனை மற்றும் சுவையை உணரவைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். UEA இணையதளத்தில் ஒரு அறிக்கையில், பேராசிரியர் கார்ல் பில்பாட் கூறுகையில், "பரோஸ்மியா என்பது வாசனை ஏற்பிகள் குறைவாக வேலை செய்யும் ஒரு கோளாறு என்று கருதப்படுகிறது, இதனால் வாசனை கலவையின் சில கூறுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள முடிகிறது. அதனால் அதன் உண்மையான வாசனையை உணர முடியாமல், விரும்பத்தகாத வாசனையாக மாறிவிடுகிறது, இந்த நோய் எரிக் மோர்கேம்பே ஆண்ட்ரே ப்ரீவினிடம் கூறியது போன்றது - 'இவை அனைத்தும் சரியான குறிப்புகள்தான் ஆனால் சரியான வரிசையில் இருக்கிறதென்றில்லை'.
யுனைடெட் கிங்டத்தில் 2,50,000 பெரியவர்கள் கோவிட் நோய்த்தொற்றின் விளைவாக பரோஸ்மியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் கடந்த சில மாதங்களில், குறிப்பாக கடந்த செப்டம்பரில் கொரோனா நோய் பள்ளி வகுப்பறைகளில் பரவத் தொடங்கியதிலிருந்து, இது குழந்தைகளையும் அதிகம் பாதிக்கிறது என்பதை நாங்கள் மேலும் மேலும் உணர்ந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த கோளாரில் பல வகை தூண்டுதல்கள் உள்ளன - எடுத்துக்காட்டாக, இறைச்சி மற்றும் வெங்காயம் அல்லது பூண்டு சமைப்பது, மேலும் புதிய காபியின் வாசனை, ஆகியவற்றில் இருந்து மாறுபட்ட, விரும்பத்தாகாத வாசனையை, சுவையை குழந்தைகள் பெறுகிறார்கள். ஆனால் எந்தெந்த பொருட்கள், எந்த மாதிரியான வாசனைகள் என்பது குழந்தைக்கு குழந்தை மாறுபடுகிறது.
காரணங்கள்
காரடி புனேயின் மதர்ஹுட் மருத்துவமனையின் ஆலோசகர், நியோனாட்டாலஜிஸ்ட் மற்றும் குழந்தை மருத்துவரான டாக்டர் ஜகதீஷ் கத்வடே கருத்துப்படி, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பரோஸ்மியா ஒரு குறிப்பிடத்தக்க பக்க விளைவாக இருக்கிறது. "கோவிட் பரோஸ்மியாவை ஏற்படுத்தும், ஏனெனில் இது மூக்கின் மேற்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, இது நம் வாசனை உணர்வை மாற்றுகிறது. இது வாசனை உணர்வுடன் தொடர்புடைய ஏற்பிகள் மற்றும் நரம்புகளை தற்காலிகமாக சேதப்படுத்துவதால், இந்த மாற்றம் உண்டாகிறது. கொரோனாவில் இலிருந்து மீண்ட பிறகும் சிலருக்கு இந்த அறிகுறி தென்படலாம், ஆனால் அது லேசானதாகவே இருக்கும். கொரோனா நோய் தொற்றிற்கு பிறகு, இந்த அறிகுறி குழந்தைகளில் காணப்படலாம், வாசனை உணரும் நரம்புகள் சிதைந்ததால் ஏற்படும் வாசனை குறைபாடுகள், அவர்கள் உண்ணும் உணவை பாதிக்கும்,” என்று அவர் கூறினார்.
பெங்களூரு காவேரி மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் நியோனாடாலஜிஸ்ட் டாக்டர் ஸ்ரீநாத் மணிகண்டி, கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு பல வாரங்களாக 'தங்கள் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை' என்று பெற்றோரிடமிருந்து அடிக்கடி புகார்கள் வருவதாக கூறுகிறார். "லாங்-கோவிட் எனப்படும் நீண்டகால நிலை காரணமாக பரோஸ்மியா ஏற்படலாம், இது இன்னும்கூட விஞ்ஞானிகளால் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை," என்று அவர் கூறினார்.
பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் போஸ்ட் கோவிட் பரோஸ்மியா பற்றிய சில அறிக்கைகள் உள்ளன. "நவம்பர் 25, 2021 அன்று லான்செட் வெளியிட்ட ஒரு கட்டுரை, லாங்-கோவிட் பற்றி ஆய்வு செய்துள்ளது, அதில் 303 கையெழுத்துப் பிரதிகளை மதிப்பாய்வு செய்துள்ளனர், அந்த ஆய்வு 12.8 சதவீத மக்கள் மட்டுமே வாசனை மற்றும் சுவையில் மாற்றங்களை கொண்டுள்ளனர் என்று கூறியது. லாரிங்கோஸ்கோப் (The American Laryngological, Rhinological and Otological Society) இல் ஆகஸ்ட் 2021 இல் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாசனையின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு இருந்தது. அதில் பாதிக்கப்பட்ட 94.3 சதவீத குழந்தைகள் ஒரு மாதத்திற்குள் குணமடைந்துள்ளதாகவும், இரண்டு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 100 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெரியவர்களை விட குழந்தைகளில் வாசனை செயலிழப்பு மீண்டு வருவதற்கான செயல்பாடு வேகமாக இருக்கிறது என்றும் அவர்கள் ஆய்வு கூறுகிறது,” என்று பாராஸ் ஹாஸ்பிடல்ஸ் குருகிராமில் உள்ள குழந்தை மருத்துவம் மற்றும் நியோனாட்டாலஜி HOD டாக்டர் மணீஷ் மன்னன் கூறினார்.
என்ன நடக்கும்?
“பரோஸ்மியா உள்ள குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சாக்லேட் உட்பட மிகவும் விரும்பி உண்ணும் உணவையே கூட உண்ணாமல் இருக்கலாம், சில குழந்தைகள் சாப்பிடுவதை முற்றிலும் கைவிடலாம். உணவுகளில் குப்பை அல்லது கழிவுநீர் அல்லது அம்மோனியா அல்லது கந்தகம் அல்லது அழுகிய முட்டைகள் போன்ற நாற்றம் வீசும்,” என்று டாக்டர் கத்வாட் கூறினார்.
என்ன செய்யலாம்?
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், டாக்டர் கத்வாட்டின் கருத்துப்படி, சுவைகளைத் தடுக்க, சாப்பிடும் போது மென்மையான மூக்கு கிளிப்பைப் பயன்படுத்த குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாப்பிடும் உணர்வை அதிகம் தூண்டக்கூடிய உணவுகளையும் தயாரித்து கொடுக்கலாம், வாசனைப் பயிற்சியும் பயனளிக்கும். குழந்தைகள் மிதமான வாசம் கொண்ட உணவைச் சாப்பிட முயற்சிக்க வேண்டும், கடுமையான வாசனையைத் தவிர்க்க வேண்டும், சாப்பிடும்போது ஜன்னல்களைத் திறக்க வேண்டும் அல்லது உணவு உண்ணும் போது மின்விசிறியை ஆன் செய்து வைத்திருக்கலாம். குழந்தைகளை 'அறை வெப்பநிலை'யில் உணவை உண்ணச் செய்யலாம், அதனால் அவர்கள் வாசனையை உணர்வதை தடுக்க முடியும், ”என்று டாக்டர் கத்வாட் கூறினார். UEA இன் வாசனை நிபுணர்களின் கூற்றுப்படி, வெண்ணிலா அல்லது சுவை இல்லாத புரதம் மற்றும் வைட்டமின் மில்க் ஷேக்குகள் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சுவை இல்லாமல் பெற உதவும் என்கிறார்.
"வாசனைப் பயிற்சியில் குறைந்தது நான்கு வெவ்வேறு வாசனைகளை முகர்ந்து பார்த்தல் அடங்கும் - உதாரணமாக, யூகலிப்டஸ், எலுமிச்சை, ரோஸ், இலவங்கப்பட்டை, சாக்லேட், காபி அல்லது லாவெண்டர் ஆகியவற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறை, ஒவ்வொரு நாளும் வித விதமான வாசனை பொருட்களை பல மாதங்களுக்கு நுகர்ந்து வருவதால் நல்ல பலன் கிடைக்கும்." என்று டாக்டர் மணிகண்டி பரிந்துரைத்தார்.
சிகிச்சை
"இதற்காக பல்வேறு வகையான நேசல் ஸ்ப்ரேக்கள் உட்பட பல்வேறு சிகிச்சைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இது ஒரு தற்காலிக பிரச்சனை என்பதால், மிகவும் தீவிரமான சிகிச்சை தேவையில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லாத குழந்தைகளை, வெளிநோயாளர் பிரிவில் தொடர்ந்து மருத்துவ ஆலோசனையை பின்தொடர வேண்டும்,” என்று டாக்டர் மன்னன் வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி மேலே சொன்ன வழிகாட்டுதல்கள் கூட குழந்தைகள் முற்றிலும் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் உடலில் சக்தி குறையும் என்பதற்காகத்தான். உணவை தொடர்ந்து உட்கொள்ள செய்தாலே போதும், சிகிச்சைகள் இன்றி மருத்துவர்கள் வழிகாட்டுதல்களுடன், விரைவில் குணமடைந்துவிடும்.