இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு  மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தகவலை மத்தி சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்தியா தனது தடுப்பூசியை விரிவுபடுத்துகிறது. ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்தியாவில் 5 EUA தடுப்பூசிகள் உள்ளன. இது நமது தேசத்தின் கூட்டுப் போராட்டத்தை மேலும் அதிகரிக்கும்’ எனப் பதிவிட்டுள்ளார்.


 






ஒரே ஒரு டோஸ் செலுத்திக்கொள்ளு வகையில்  ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. 4 தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் 5ஆவது ஆக ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தனது தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க விண்ணப்பித்தது. இதனைத் தொடர்ந்து உயர்மட்ட அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது. அப்போது இந்தியாவிற்கு தன்னுடைய தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது கடினம் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் தன்னுடைய தடுப்பூசிகளை பயோலாஜிகல் ஈ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்தியாவில் தயாரிப்பதாக ஜான்சன் நிறுவனம் தெரிவித்திருந்தது. 


இதனைத் தொடர்ந்து பயோலாஜிகல் ஈ நிறுவனம் தயாரிக்கும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்திருந்தது. ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு ஆய்வக பரிசோதனை தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கூறியிருந்தது.


இந்த மருந்தை இந்தியாவில் முதலில் அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த நிலையில், மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 


ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை டோஸ் தடுப்பூசியை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.